-சுபத்ரா -

 “12 ஆண்டுகளுக்குப் பிறகும், புலிகளின் கொள்கை பற்றி எச்சரிக்கப்படுகிறது. அது உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்ற அச்சம் ஏற்படுகிறது என்றால், அவர்களை மௌனிக்கப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வழிமுறை சரியானதா என்ற கேள்வி எழுகிறது”

“தமிழ் மக்களின் பிரச்சினையின் பிரதிபலிப்புத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றிருக்க முடியாது”

உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும், பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையையும், வான்பிரிவு ஒன்றையும், பீரங்கிப் படைப்பிரிவு உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கொண்ட, நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்த, ஒரு வலிமையான இராணுவ அமைப்பு என்பதை யாரும் நிராகரிக்க முடியாது.

அதுபோலவே, தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை இராணுவத்தின் திறமையையும் யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. போர் வெற்றி கொள்ளப்பட்ட வழிமுறைகளில் தவறுகள், விமர்சனங்கள் இருக்கலாம். 

ஆனால் அதற்காக கையாளப்பட்ட இராணுவ உபாயங்கள், உத்திகள் என்பன ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல. தமது போர் வெற்றிக்கான ஒரு காரணத்தை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார்- அது போர் உத்தி சார்ந்த விடயம்.

400 மீற்றர் வரை குறுகிப் போயிருந்த, முன்னரங்கை, 15 கிலோ மீற்றர் வரை விரிவுபடுத்தியதை ஒரு முக்கியமான உத்தி மாற்றமாக அவர் விபரித்திருக்கிறார். அதாவது, நீண்ட முன்னரங்கப் பிரதேசங்களில் எந்த இடத்திலும், போரை நடத்தக் கூடிய வகையில் தயார்படுத்திக் கொண்டமை.

இது, குறைந்த ஆளணி வளத்தைக் கொண்ட விடுதலைப் புலிகளுக்கு பாதகமானதாக இருந்தது. முன்னர் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த முனையிலேயே சண்டைகள் நடந்தன. அவ்வாறான குறுகிய போர்முனைக்குள், தமது படை வளங்களை ஒன்று குவித்தும், பொறிவெடிகள், போன்ற உத்திகளைக் கையாண்டும், ஆட்டிலறிச் சூட்டாதரவை ஒருமுகப்படுத்தியும், புலிகளால் முறியடிக்க முடிந்தது.

ஆனால், இறுதிக்கட்டப் போரில், கிளாலி தொடக்கம், நாகர்கோவில் வரை ஒரு எல்லைக் கோடும், கொக்குத்தொடுவாய் தொடக்கம் மன்னார் வரை இன்னொரு எல்லைக் கோடுமாக இருந்த முன்னரங்க நிலைகளில்- எந்த இடத்தில், எப்போது நகர்வு நடக்கும் என்று கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது முக்கியமானதொரு உத்தி மாற்றம் தான்.

இது போரின் இறுதிக் கட்டம் வரையில் நீடித்தது மட்டுமல்லாமல், இராணுவம் வெவ்வேறு விதமான துணை உத்திகளைக் கையாளுவதற்கும் வழிவகுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, இப்போது, கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகப் போகின்றன.

ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்களின் கொள்கைகள் குறித்த அச்சத்தில் இருந்து அரசாங்கமோ அல்லது இராணுவ தலைவர்களோ விடுபடவில்லை. எப்போதெல்லாம், அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் ஏற்படுகின்றனவோ, அப்போதெல்லாம், தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றனர்.

2009 மே மாதம் 19 ஆம் திகதி போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன். அவரது ஈழக் கோட்பாடும் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டது என்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அதுபோலவே தான், அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கூறியிருந்தனர். அதற்குப் பின்னரும் கூட, அவர்கள் இனி தமிழீழ விடுதலைப் புலிகளால் தலையெடுக்க முடியாது, பரவலாக முகாம்களை அமைத்தும், புலனாய்வுப் பிரிவுகளை பலப்படுத்தியும் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கிறோம், என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

ஆனாலும், அவ்வப்போது கிளைமோர் அரசியலும் துப்பாக்கி அரசியலும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. புலிகளின் மீளுருவாக்கம் பற்றிய கதைகள் அவிழ்க்கப்படுகின்றன. இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக இருந்தாலும், அவ்வாறான ஒரு போக்கில் தமிழர்கள் இருப்பது போல காட்டிக் கொள்வதை, சிங்களத் தலைவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், பாராளுமன்றத்தில் பேசிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னமும் குறைந்து விடவில்லை என்று கூறியிருந்தார். அவர் மாத்திரமன்றி தற்போதைய ஜனாதிபதியும், ஏனைய அரசாங்கத் தலைவர்கள் பலரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் ஈழச் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது கூறி வருகிறார்கள்.

பிரபாகரனுடன் புதைக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட, அவரது ஈழக்கனவு அல்லது சித்தாந்தம் பற்றி, இப்போதும் பேசப்படுகிறது, அது உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அந்த நெருப்பு இன்னமும் அணையவில்லை என்று அவர்களே கூறுகின்றனர்.

அவ்வாறானால், 12 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக உரிமை கோரப்பட்ட போரின் வெற்றி மீது, இப்போது கேள்வி எழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஆயுதப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தித்தான், அரசாங்கம் இராணுவ வழிமுறையின் மூலம் அழித்திருந்தது.

அரசியல் வழிமுறைகளின் மூலம் பயங்கரவாதத்துக்கு தீர்வு காண முடியாது என்று தான், அரசாங்கம் நியாயப்படுத்தியிருந்தது. ஆனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகும், புலிகளின் கொள்கை பற்றி எச்சரிக்கப்படுகிறது. அது உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்ற அச்சம் ஏற்படுகிறது என்றால், புலிகளை மௌனிக்கப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வழிமுறை  சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

புலிகள் அழிக்கப்பட்டது சரியா- தவறா என்பது ஒரு புறத்தில் இருக்க, அவர்களை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வழிமுறை சரியானதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. இந்த வழிமுறையைப் பயன்படுத்தியும், புலிகள் அல்லது அவர்களின் சித்தாந்தம் அழிக்கப்படவில்லை என்றால், அந்த வழிமுறையின் தோல்வியாகத் தானே கருத வேண்டும்.

தமிழ் மக்களின் பிரச்சினையின் பிரதிபலிப்புத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றிருக்க முடியாது. அதுபோலவே, விடுதலைப் புலிகளை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வழிமுறைக்குப் பதிலாக, அரசியல் வழிமுறையைப் பயன்படுத்தியிருந்தால், பேரழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

மாறாக இராணுவ வழிமுறைகளைப் பயன்படுத்தி, புலிகளை அழித்து விட்ட பின்னரும், அவர்களின் சித்தாந்தம் குறித்த அச்சத்தில் வாழ வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது. இந்த நிலைமைக்கு காரணம், போரை முடிவுக்கு கொண்டு வந்து விட்டால், தமிழர்களின் பிரச்சினையை முடித்து விடலாம் என்று கருதியமை தான்.

அரசாங்கம், புலிகளுடன் ஈழக்கனவு மாத்திரம் செத்து விட்டதாக கருதவில்லை. தமிழர்களுக்கு இனி அதிகாரங்களைக் பகிர வேண்டியதில்லை  என்றும் தான் கருதியது. எதையும் கொடுக்காமல், தமிழர்களை நிரந்தரமாக இப்படியே வைத்திருக்கலாம் என்று எண்ணியிருந்தது.

இந்தச் சிந்தனை தான், அரச தரப்புக்கு இன்னம் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. புலிகள் பற்றிய கனவு அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.