தொடர்கதையாகும் இறுதிக்கிரியைக்கான உரிமைப் போராட்டம்

Published By: J.G.Stephan

20 Dec, 2020 | 02:12 PM
image

- சஹாப்தீன் - 

நாட்டின் பிரஜைக்கு அங்கு வாழ்வதற்கும், இறந்ததன் பின்னர் இறுதி கிரியையை அவரது மத விழுமியங்களைப் பேணி நிறைவேற்றிக் கொள்வதற்கும் பூரண உரிமையுண்டு. இந்த உரிமை எல்லா நாடுகளின் அரசியல் யாப்பிலும், மனித உரிமை சாசனங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

ஆயினும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை மத விழுமியங்களுக்கு அமைவாக அடக்கம் செய்வதற்கு முடியாதுள்ளது. கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற அனைவரையும் தகனம் செய்வதற்கே அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

அரசாங்கத்தின் இந்த முடிவு மரணித்த ஒருவருக்கு இருக்கின்ற அடிப்படை உரிமையை மீறுவதாகவே இருக்கின்றது. கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதில் பிரச்சினைகளில்லை என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. 

இதனை உலகில் உள்ள சுமார் 180இற்கும் மேற்பட்ட நாடுகள் அமுல்படுத்தியுள்ளன. ஆனால், இலங்கையிலும், சீனாவிலும் தான் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்கள் கட்டயாப்படுத்தப்பட்டு எரிக்கப்படுகின்றன. 

இலங்கை வாழ் முஸ்லிம்கள், கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்திடம் பல தடவைகள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. 

உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்களை மேற்கொண்ட போதிலும், முஸ்லிம்களுக்கு அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக வெள்ளைத்துணி கட்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். இந்த போராட்டத்திற்கு சிங்கள, தமிழ் மக்களும் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்கள். 

இதேவேளை, கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் சொஹ்லிக்கிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாதென்று முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். 

மறுக்க முடியாத உரிமை
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன் வைத்ததனை, பௌத்த இனவாதிகள் தேசத்துரோகச் செயலாகவே கருதிக் கொள்கிறார்கள். எக்காரணம் கொண்டு அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாதென்றும் தெரிவிக்கின்றார்கள். 

கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் மாத்திரமே கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். 

கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்ய வேண்டுமென்பதனை தனியே முஸ்லிம்களின் கோரிக்கையாகவே பௌத்த இனவாதிகளும், ஆட்சியாளர்களும் கருதுகிறார்கள். ஆனால், முஸ்லிம்கள் மாத்திரமின்றி பௌத்தர்களிலும், இந்துக்களிலும் பெரும்பான்மையினரும், கிறிஸ்தவர்களும் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்ய வேண்டுமென்பது முஸ்லிம்களின் பிரச்சினையாக மாத்திரமின்றி சிங்கள, தமிழ் மக்களினதும் பிரச்சினையாக உருமாறியுள்ளது. 20 நாள் பச்சிளங் குழந்தையின் மீது கருணை காட்டாது எரித்தமை நாட்டு மக்களிடையே இனம், மதம், மொழி என்ற வேறுபாடுகளைக் கடந்து சிந்திக்க வைத்துள்ளது. 

இதனால் தான் வெள்ளைச் சீலை, கபன் சீலைப் கட்டும் போராட்டத்தில் மூவின மக்களும் இணைந்துள்ளார்கள். கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தை கோரிக் கொண்டிருக்கின்றார்கள். 

பொரளை பொது மயான இரும்பு வேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்போராட்டம் நாடு பூராகவும் பரவிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் பிரதேசங்களில் மாத்திரமின்றி ஏனைய இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களிலும் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் அரசாங்கத்திடம் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 

பொரளை பொதுமயானம் முன்பாக கத்தோலிக்க மதப்பாதிரிமார்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெள்ளைச் சீலையை கட்டியமை நாட்டில் பேசு பொருளாகியுள்ளது. 

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் மக்களும், அமைப்புக்களும் சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறு அரசாங்கத்தை வேண்டி விழிப்புணர்வு போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள். 

இவ்வாறு இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற உரிமையைக் கொண்டவர்களை, கொவிட் தொற்றினால் மரணிக்கின்ற போது அடக்கம் செய்வதற்கு தடைகள் இருப்பது அவர்களின் மறுக்க முடியாத உரிமையை பலத்காரமாக பறித் கொண்டதாகவே இருக்கின்றது. 

இந்த நாட்டில் சிறுபான்மையினரின் பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சிறுபான்மையினரை தேசிய இனமாகவும், அவர்களும் இந்த நாட்டின் மீது உரிமையுடைய தேசிய இனங்கள் என்பதனையும் சிங்கள தேசியவாதிகளும், பௌத்த இனவாதிகளும் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நாடு தனியே பௌத்தர்களுக்கு மாத்திரமே சொந்தமானதென்ற இறுமாப்பில் நடந்து கொண்டிருக்கின்றார்கள். 

இதேவேளை, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உரிமைக்கான அரசியல் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படும் போது மௌனமாகவும், விட்டுக் கொடுப்புடனும் செயற்பட்டதன் விம்பமே கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்யும் உரிமையும் மறுக்கப்படுவதற்கு காரணமாகும்.

தலைவர்களும், மக்கள் பிரதிநிதிகளும் முறையாகச் செயற்படாது போனால், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் உரிமைகள் இழக்கப்பட்டே செல்லும் என்பதற்கு இலங்கை முஸ்லிம்கள் நல்ல உதாரணமாகவே இருக்கின்றார்கள். பொறுப்புக்களை மறந்து செயற்பட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகள் தான் முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு காரணமாகும். 

இதேவேளை, சர்வதேச நாடுகளும், அமைப்புக்களும் இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமையை கண்டித்துள்ளன.

மாற்று வழிகள்
இவ்வாறு போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாற்று வழிமுறைகள் பற்றியும் அரசாங்கம் சிந்திக்கின்றது. கொவிட் தொற்றினால் மரணிக்கின்றவர்களின் உடல்களில் 36 நாட்களுக்கு கொரோனா வைரஸ் உயிருடன் இருக்குமென்று இலங்கை சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். 

இந்நிலையில் மேற்படி மரணிக்கின்றவர்களின் உடல்களை கொங்றீட் குழியில் அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணத்துவக் குழு சிபார்சு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றே மேற்படி இணக்கத்தை மாலைதீவின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மாலைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்படவில்லை என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மாலைதீவில் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாலைதீவின் இலங்கை தூதுவருக்கு காட்டமான கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்கள். 

இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்படுமாயின் அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே பரவியுள்ளது. கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தடைகள் உள்ள நிலையில், அந்த உடல்களை இஸ்லாமிய முறைப்படி மாலைதீவில் அடக்கம் செய்யப்படும் பட்சத்தில் அது முஸ்லிம்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆயினும், கடல் நீரால் சூழப்பட்டுள்ள மாலைதீவிலுள்ள ஒரு சிறிய தீவில் வெளிநாட்டு பிரஜைகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாலைதீவு அரசாங்கம் அனுமதிக்கும் போது, இங்குள்ள குறிப்பிடப்படும் நிலக்கீழ் நீர் பாதிக்கும் என்பதும், அதனால், தொற்று மேலும் அதிகரிக்கும் என்பதும் வேறு தேவைகளுக்காகவே சொல்லப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை. கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் முடியாதென்பதற்கு சொல்லப்படுகின்ற காரணங்கள் எவையும் விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்படவுமில்லை  என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவரின் உடலில் 36 நாட்களுக்கு குறித்த வைரஸ் உயிர் வாழுமென்று சொல்லப்படுவது கூட இந்நாட்டு பிரஜைகளின் அடக்கம் செய்யும் உரிமையை மறுப்பதற்காக முன் வைக்கப்படும் போலிக் காரணங்களில் ஒன்றாகும். 

உலக புகழ் பெற்ற தொற்று நோயியல் நிபுணர் பேராசிரியர் மலிக் பீரிஸ் இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் பிரச்சினை குறித்து கருத்துத் தெரிவிக்கையில் இறந்தவரின் உடலில் வைரஸ் பரவாது என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், எபோலா போன்ற சில பற்றீரியாக்களைப் போலல்லாமல் வைரஸ்கள் உயிருள்ள உயிரணுக்களில் மட்டுமே பிரதிபலிக்க முடியும். வைரஸ்கள் வரையறையின்படி, ஒரு வைரசிற்கு உயிரணுக்கள் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நபர் இறந்ததும், அவரது உடலில் உள்ள இழையங்கள் இறந்தது விடும். அத்தோடு வைரசும் இறந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த உடல்கள் நேரடியாக ஓடும் நீரில் புதைக்கப்பட்டால் தான் ஆபத்தாகும். ஆனால் உடல் தரையில் இருந்து ஆறு அடி கீழே மக்க முடியாத உரையினால் நன்றாக மூடி புதைக்கப்படும் போது, அது மிகவும் பாதுகாப்பானது. ஏதேனும் வாய்ப்பால் உடம்பில் இருக்கும் எஞ்சிய வைரஸ் பல அடிகளை தாண்டி மண்ணின் வழியாக வடிகட்டி தண்ணீரில் இறங்கி உயிர்வாழ்வது மிகவும் சாத்தியமற்றது என்றும் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு துறைசார் நிபுணர்கள் அடக்கம் செய்வதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பில்லையென விஞ்ஞான அடிப்படையில் விளக்கங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய முயற்சிகளை எடுக்கின்றார் என்பது கூட முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்பதில் ஜனாதிபதிக்கு இருக்கின்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும், அதேவேளை, இலங்கையில் அடக்கம் செய்வதற்கு வேறு காரணிகள் தடைகள் இருப்பதையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. 

அரசியல் தேவைக்காக கொரோனாவால் மரணிப்பவர்களை எரிக்க வேண்டுமென்ற முடிவினை மீளப்பெறுகின்ற போது, பௌத்த இனவாத அமைப்புக்களின் எதிர்ப்பையும், சிங்கள மக்களிடையே அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கையில் கீறல்களையும் ஏற்படுத்திவிடுமென்ற அச்சம் ஆட்சியாளர்களிடம் தொற்றியுள்ளதாகவே இருக்கின்றது. 

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என்பதற்கே பௌத்த இனவாதிகள் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டனர். அதன்பின்னர் அத்தகையதொரு முடிவு எடுக்கப்படவில்லை என அரசாங்கம் மறுத்துரைத்தமையும் குறிப்பிடத்தக்கது. 

என்ன நடக்கும்?
கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை எரிக்க வேண்டுமென்பதனை கட்டாயப்படுத்தியுள்ளதை உலக நாடுகளும், அமைப்புக்களும் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்று இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பதனாலும், முஸ்லிம்களின் கோரிக்கையாக மாத்திரம் காணப்பட்ட இவ்விவகாரம் சிங்கள, தமிழ் மக்களின் பிரச்சினையாகவும் வீரியமடைந்து கொண்டு செல்வதனை அவதானிக்கின்ற போது, கொரோனா தொற்றினால் இறப்பவர்களை சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளின் படி உலக நாடுகளில் அடக்கம் செய்வது போன்று இலங்கையிலும் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று நாட்டு மக்களில் பெரும்பான்மையினர் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன் வைக்கும் சூழ்நிலை ஏற்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும், கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் பட்சத்தில் இதனை பௌத்த இனவாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, கொரோனா தொற்றில்லாது மரணிக்கின்றவர்களையும் அடக்கம் செய்வதற்கு கருத்துக்களை முன்வைக்கலாம். இங்கு வாழ்வதற்கே அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள். 

மரணித்ததன் பின்னர் மண்ணில் அடக்கம் செய்வதற்கு உரிமையில்லை என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிறுபான்மையினரை இங்கு வாழ்வதற்கே அனுமதித்துள்ளோம். அதனை மீறி அவர்கள் இந்த நாட்டின் மீது உரிமை கொண்டாட முடியாதென்று ஏற்கனவே பௌத்த இனவாதிகள் தெரிவித்துள்ளமையை நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஆதலால், ஆறுதலுக்காக மாலைதீவில் அடக்கம் செய்வதனை ஏற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் மரணிக்கின்ற முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான உரிமை நிரந்தரமாக பறிக்கப்பட்டு விடுமோ என்ற பயமும் பெரும்பாலானா முஸ்லிம்களிடையே காணப்படுகின்றது.

இதனால், கொரோனாவினால் மரணிக்கின்ற முஸ்லிம்களை பிறந்த மண்ணில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்று முஸ்லிம்கள் கோரிக்கைகளை முன் வைத்து சாத்வீகப் போராட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள். இவர்களின் இப்போராட்டத்திலுள்ள நியாயத்தை அறிந்த ஏனைய இனத்தவர்களும் அதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆதலால், கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்கு மறுக்கப்படுவது தனியே முஸ்லிம்களை மாத்திரம் பாதிக்கவில்லை. இந்த வைரஸால் இறப்பவர்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று விரும்புகின்ற ஏனைய மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதனை அரசாங்கமும், அடக்கம் செய்யக் கூடாதென்று குரல் கொடுப்பவர்களும் சிந்திக்க வேண்டும். 

மேலும், இலங்கைப் பிரஜை ஒருவர் கொரோனா தொற்றினால் மரணித்தவரை வெளிநாட்டில் அடக்கம் செய்யும் போது, அது நாட்டின் கீர்த்திக்கும், ஆட்சியாளர்களுக்கும் பாதக நிலையை உலகளவில் ஏற்படுத்திவிடும். சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை நிருபிப்பதற்கு மிகப் பெரிய ஆதரமாகவும் அமைந்துவிடும். 

முஸ்லிம்களை பகடைக்காய்களாக்கி மேற்கொள்ளப்படும் அரசியல் மற்றும் இனவாத செயற்பாடுகளின் எதிர்விளைவாக கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாகிவிடும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13