(செ.தேன்மொழி)
மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படும் இந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மேல்மாகாணத்திலிருந்து வெளியேற பயன்படுத்தப்படும் நான்கு பகுதிகளில் நேற்று அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 451 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதுடன், அதில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிச் செய்யப்பட்டது. அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களுக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணத்தில் இந்த பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கவில்லை. தீபாவளியின் போது பல்வேறு எச்சரிக்கைகளை செய்திருந்தபோதும் பலர் மேல்மாகாணத்திலிருந்து வேறு பிரதேசங்களுக்கு சென்றிருந்தனர். இதனால் வெளிமாவட்டங்களிலும் வைரஸ் கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டன. அதன் காரணமாக மேலும் வைரஸ் கொத்தணிகள் உருவாகுவதை தடுக்கும் எண்ணத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீட்டை விட்டு வெளிபிரதேசங்களுக்கு செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்களது விபரங்கள் எழுதப்பட்ட கடதாசி தாள்களை அல்லது அது சார்ந்த ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். அவற்றை  அருகில் வைத்திருந்தால் சுகாதார பிரிவினர், பொலிஸார் உள்ளிட்டோர் இந்த விபரங்களைக் கேட்டால் அவற்றை கொடுக்க முடியும் என்றார்.