ரஷ்ய விளையாட்டு வீரர்கள் தனது நாட்டின் கொடியின் கீழ் ஒலிம்பிக் உட்பட முக்கிய சர்வதேச போட்டிகளில் போட்டியிடுவதைத் தடுக்கும் ஊக்கமருந்து தடைகளை சுவிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

எனினும் தடையின் காலத்தை நான்கு ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகவும் சுவிஸ் நீதிமன்றம் குறைத்துள்ளது.

இந்த தீர்ப்பானது அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக், 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் கட்டாரில் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ணம் போன்ற விளையாட்டுகளில் ரஷ்ய வீரர்கள் தமது நாட்டு கொடியுடன் பங்கேற்பதை தடைசெய்துள்ளது.

இந்த நடவடிக்கையானது ரஷ்ய விளையாட்டுக்கு கடுமையான அடியாகும்.

வியாழக்கிழமையுடன் அமுலுக்கு வந்த இந்த தடையுத்தரவானது 2022 டிசம்பர் 16 ஆம் திகதியுடன் நிறைவடையும்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ரஷ்ய வீரர்கள் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர். வீரர்களுக்கு ரஷ்யாவே உதவியாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 

மேலும் ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் இருந்த தகவல்களை உலக ஊக்கமருந்து தடுப்பு நிலையத்திற்கு (வாடா) கொடுப்பதற்கு முன், அந்த தகவல்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.