(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த மற்றும் அந்த கட்சியில் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளித்து செயற்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப்பிரிவிற்கும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் செயற்பாட்டளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் சட்டதரணி நிஸ்ஸங்க  நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித்துடன் இணைந்து செயற்படும் அதே வேளை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையையுடைய அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.