•வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய்....

•பலரும் நன்மை அடையக்கூடிய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள்....

•கிராமப்புற மேம்பாட்டு சங்கங்களின் நிதி வரம்புகளை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது....

-பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ

வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளமையால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அனுராதபுரம் வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (2020.12.16) இடம்பெற்ற 'கிராமத்துடன் கலந்துரையாடல் ஊடாக வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' தேசிய வேலைத்திட்டத்தின் வட மத்திய மாகாண குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்கால வரவு செலவுத் திட்டங்களுக்கமைய அபிவிருத்தி திட்டங்களுக்காக முன்னுரிமை வழங்கும்போது பலருக்கும் நன்மையளிக்கும் திட்டங்களுக்கு அதிக வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்குமாறு பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கள் அனைத்தையும் கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த குழுக்கள் அழைக்கப்பட்டு ஒரு கிராம சேவகர்; பிரிவிற்கு குறைந்தபட்சம் ஒரு 'கிராமத்துடன் கலந்துரையாடல்' வேலைத்திட்டத்தை நடத்தி கிராம மட்டத்தில் கருத்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள். இந்த வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்புண்டு.

டிஜிட்டல் இலங்கையை உருவாக்குவதற்கு  ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இதற்கமைய இலங்கையிலுள்ள அனைவருக்கும் தங்களது வீடுகளிலிருந்து தேவையான தகவல்தொடர்பு சேவைகளை பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை மேற்கொள்கிறோம். இம்முறையும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் தூரம்வரை அபிவிருத்தி செய்து வருகிறோம். அதேபோன்று 'அனைவருக்கும் நீர்' திட்டத்தினூடாக நாட்டின் அனைத்து மக்களதும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வோம்.

இவை அனைத்து நடவடிக்கைகளின் போதும் சுற்றாடல் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துகின்றோம். நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கும்போது நகர்ப்புற காடுகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வனவிலங்குகளினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும் பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கிராமத்திற்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் 5000 மின்மாற்றிகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய சூரிய சக்தியை வழங்க மின்சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலவச உரம் மற்றும் நீர் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் பாரிய தொகையை விவசாயிகளுக்காக ஒதுக்கியுள்ளது. அவ்வாறு செய்து விவசாய உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கிறது. எனினும், இதற்கு சமமான வகையில் நுகர்வோருக்கும் அந்த நிவாரணம் கிடைக்குமா என்பது சந்தேகம். அரசிடம் நிலையான நெல் இருப்பு இல்லாமை இதற்கு காரணமாகும். அடுத்த போகம் முதல் அனைத்து விவசாயிகளிடமிருந்தும் 8 முதல் 10 வீத நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். கிராம மட்டத்தில் களஞ்சியங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கூட்டுறவு மற்றும் விவசாயிகள் சங்கங்களுக்கு பொருத்தமான களஞ்சியங்கள் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறான களஞ்சியசாலைகளுக்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நெல் கொள்வனவிற்கு அவசியமான நிதியும் அரசாங்கத்தினால் இதுவரை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சமுர்த்தி மற்றும் கூட்டுறவிற்கும் இணைந்து கொள்ளலாம். இன்று ஏராளமான கூட்டுறவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு தேவையான  உரத்தை முறையாக விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அரசு போதுமான உரத்தை இறக்குமதி செய்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் உரம் கிடைக்காவிடின் உரிய பயனை பெற முடியாது. உரத்துக்காகவே ஒரு இராஜாங்க அமைச்சர் இருக்கிறார். ஒரு உர பணியகம் உள்ளது. உரங்களை இறக்குமதி செய்வதற்கு அதிக பணம் ஒதுக்கப்படுகிறது. உரமானது துறைமுகத்திலிருந்து நேரடியாக இந்த மாகாணத்திற்கு அனுப்பப்படுகிறது. சமூக அமைப்புகளின் ஊடாக கிராம நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை கிராம அபிவிருத்தி சங்கங்களின் நிதி வரம்பை அதிகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அத்துடன், காணி எல்லை நிர்ணயம் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. காணி எல்லைகளை மாற்றுவதற்கு எவருக்கும் அதிகாரமளிக்கப்படவில்லை. நாட்டில் காணப்படும் ஒரு முக்கியமான பிரச்சினையான வட மத்திய மாகாண மக்களுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களிலிருந்தும் நல்ல பலன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்கள், வட மத்திய மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.