எல்.பி.எல்.; இறுதிப் போட்டியின் இறுதித் தருணங்களும் விருதுகள் பெற்ற வீரர்களும்!

Published By: Vishnu

17 Dec, 2020 | 09:19 AM
image

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் (எஸ்.எல்.சி) ஏற்பாடு செய்த மை 11 சர்க்கிள்; லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு: 20 கிரிக்கெட் தொடரை திசாரா பெரேரா தலைமையிலான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் கைப்பற்றியுள்ளது.

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் போட்டியாளரான காலி கிளாடியேட்டர்ஸை எதிர்த்து ஆடிய யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்று சம்பியனாக முடிசூட்டியது.

நேற்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் ஜோன்சன் சார்லஸ் ஆகியோர் 28 பந்துகளில் 44 ஓட்டங்களை எடுத்தனர். 

அவிஷ்கா 23 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்களை எடுத்தார், சார்லஸ் 15 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்தார்.

எனினும் 4.4 ஆவது ஓவரில் தனஞ்சய லக்ஷானின் பந்து வீச்சில் தனுஷ்க குணதிலக்கவின் அற்புதமான பிடியெடுப்புக் காரணமாக ஜோன்சன் சார்லஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த அசலங்காவும் 10 ஓட்டங்களுடன் சந்தகனின் பந்து வீச்சில் சிக்கி வெளியேற, 8.4 ஆவது ஓவரில் அவிஷ்க பெர்னாண்டோ 27 ஓட்டங்களுடனேயே செஹான் அராச்சிகேயின் பந்து வீச்சில் செஹான் ஜெயசூரியாவிடம் பிடிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனால் யாழ்ப்பாணம் அணி 70 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

நான்காவது விக்கெட்டுக்கு மாலிக் மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி சேர்ந்து 44 பந்துகளில் 69 ஓட்டங்களை சேர்க்க யாழ்ப்பாணம் அணி 139 ஓட்டங்களை பெற்றது.

ஷோயிப் மாலிக் 35 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களை எடுத்து அணி சார்பில் அதிகபடியான ஓட்டங்களை பதிவு செய்து தனஞ்சய லக்ஷானின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, தனஞ்சயடி சில்வா 20 பந்துகளில் இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 33 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

போட்டியில் இறுதி தருணத்தில் அதிரடி காட்டிய அணித் தலைவர் திசர பெரேரா இன்னிங்ஸின் இறுதி 24 பந்துகளில் 14 ஐ மாத்திரம் எதிர்கொண்டு இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடங்கலாக 39 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காதிருந்தார்.

இதனால் யாழ்ப்பாணம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை குவித்தது.

பந்து வீச்சில் காலி அணி சார்பில் தனஞ்சய லக்ஷன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் தனஞ்சய லக்ஷான் ஆவார். 

அவரைத் தவிர அமீர், செஹான் அராச்சிகே மற்றும் சந்தகான் ஆகியோரும் தமது பங்கிற்கு தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

189 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காலி அணியானது தொடக்கத்தில் இருந்தே எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. 

ஆரம்ப ஓவரில் இருந்து பந்து வீசிய தனஞ்சய டி சில்வா, சுரங்கா லக்மல் ஆகியோர் முதல் ஆறு ஓவர்களில் வெறும் 30 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை தகர்த்தெறிந்தனர்.

தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரரான தனுஷ்க குணதிலக்க ரன் அவுட் ஆனது காலி அணிக்கு தாங்க முடியாத பேரிழப்பாகும். 

இதனிடையே முதல் ஓவரிலேயே ஹஸ்ரத்துல்லா ஸசாயை டக்கவுட்டுடன் ஆட்டமிழக்கச் செய்து கிளாடியேட்டருக்கு இன்னிங்ஸைத் தொடங்க தனஞ்சய டி சில்வா பெரும் சவாலை ஏற்படுத்தினார்.

ஆனால் அணித் தலைவர் பானுகா ராஜபக்ஷ மற்றும் ஷெஹான் ஜெயசூரியா நான்காவது விக்கெட்டுக்காக 55 ஓட்டங்களை பெற அணியின் ஓட்ட எண்ணிக்கையும் 62 ஆனது.

எனினும் ஷோயிப் மாலிக், உஸ்மான் ஷின்வரி ஆகியோர் கூட்டாக ஒன்றிணைந்து பானுக ராஜபக்ஷவை 40 ஓட்டங்களுடனும், ஷெஹான் ஜெயசூரியவை 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினர்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக இந்த 40 ஓட்டங்களை பெற்றார்.

நடுத்தவர வரிசையில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கிய அசாம் கான், 17 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்களை எடுத்தார். இருந்தபோதும் அவரை டுவைன் ஆலிவர் சரித் அசலங்காவின் உதவியுடன் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். 

அவரின் வெளியேற்றத்தின் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய காலி அணி இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் குவித்தது.

ஸ்டோலியன்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் ஷோயிப் மாலிக் மற்றும் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வர்னிந்து ஹசரங்க, டுவைன் ஆலிவர், தனஞ்சய டிசில்வா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால் யாழ்ப்பாணம் ஸ்டோலியன்ஸ் அணி 53 ஓட்டங்களினால் வெற்றி பெற்று முதல் லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை முத்தமிட்டது.

‍மை 11 சர்க்கிள்; 2020 லங்கா பிரீமியர் லீக் தொடரின் விருதுகள்:

  • வெற்றியாளர் - யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்
  • இரண்டாம் இடம் -காலி கிளாடியேட்டர்ஸ்
  • வளர்ந்து வரும் வீரருக்கான விருது - தனஞ்சய லக்ஷன்
  • இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் - சோயிப் மாலிக்
  • தொடரின் ஆட்ட நாயகன் - வாணிந்து ஹசரங்கா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35