(நா.தனுஜா)

உயர்நீதிமன்றக் கட்டடமே எமது நாட்டு நீதித்துறையின் உச்சம் என்பதுடன் அது உயர்பாதுகாப்புள்ள பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. அவ்வாறான கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விரைவானதும் வெளிப்படைத்தன்மையானதுமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

கொழும்பு புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர்நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று மாலை திடீரென தீ பரவியது. 

இந்தத் தீப்பரவல் உயர்நீதிமன்றத்தின் வழக்குக்கோவைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய தேசியக்கட்சியினால் இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீப்பரவல் சம்பவம் குறித்து அவதானம் செலுத்தியிருக்கிறோம். அக்கட்டடமே எமது நாட்டு நீதித்துறையின் உச்சம் என்பதுடன் அது உயர்பாதுகாப்புள்ள பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விரைவானதும் வெளிப்படைத்தன்மையானதுமான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதியிலேயே உயர்நீதிமன்றம் அமைந்திருக்கின்றது. 

அங்கு மிகமுக்கிய வழக்குகள் தவிர்ந்த ஏனைய நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் பழைய பொருட்கள் அல்லது கழிவுகள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 

அதே இடத்திலிருந்த ஆவணங்கள் மற்றும் கோப்புகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் எந்தவொரு கோப்புகளும் காணாமல்போகவில்லை என்பதை உறுதிசெய்வதற்கான முழுமையான மதிப்பீடொன்று செய்யப்பட வேண்டும்.

அதேபோன்று அந்தக் கட்டடத்தின் பாதுகாவலர்களும் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும். 2019 இற்கு முன்னர் எமது அரசாங்கம் நீதிமன்ற கோப்புகளை கணினியில் ஆவணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் அதனை அமுல்படுத்துவது மாத்திரமே நிலுவையில் இருந்தது. அந்தத் திட்டத்தைத் தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகின்றதா என்று அறிந்துகொள்ள விரும்புகிறோம். அவ்வாறு செயற்படுத்தவில்லையெனின் அதற்கான காரணத்தையும் கூறவேண்டும்.