(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்தில் தொற்றாளர் இனங்காணப்படும் அளவு 80 சதவீதத்திலிருந்து 69 ஆகக் குறைவடைந்துள்ள போதிலும் , ஏனைய பகுதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

எனவே ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னரான பண்டிகைக் காலத்தில் மேல் மாகாணத்திலுள்ள மக்களிடமிருந்து பொறுப்பான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

முழுநாட்டிலும் சுமார் 154 மரணங்கள் பதிவாகும் போது , அவற்றில் நூற்றுக்கு 56 சதவீதமான அதாவது 87 மரணங்கள் கொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளிலேயே பதிவாகியுள்ளன. இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமைக்கும் மரணங்கள் பதிவாகின்றமைக்கும் ஏதுவான காரணி யாதென இனங்காண்பது எதிர்காலத்தில் இந்த பகுதியில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும்.

கடந்த வாரத்திலும் , கடந்த இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட ஒட்டுமொத்த தொற்றாளர்களில் 80 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டனர். இந்த நிலைமை முதன் முறையாக 69 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால் இதன் மூலம் கிடைத்துள்ள பாரதூரமான தகவல் யாதெனில் , மேல் மாகாணத்திற்கு அப்பால் வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளமையாகும். இதன் காரணமாக மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் அரசாங்கத்திற்கும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் போக்குவரத்து கட்டுப்பாடு , சட்ட விதிகளை பிறப்பிக்க வேண்டியேற்படக்கூடும். எனவே எதிர்வரும் நாட்களில் குறிப்பாக ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் மேல் மாகாணத்திலுள்ள மக்களிடம் மிகவும் பொறுப்பான செயற்பாடுகளை நாம் எதிர்பார்க்கின்றோம்.

திங்களன்று 19 நிர்வாக மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அத்தோடு கடந்த காலங்களில் 5 – 6 மாவட்டங்களிலேயே பத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். ஆனால் தற்போது 11 மாவட்டங்களில் பத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். இவ்வனைத்தின் மூலமும் மேல் மாகாணத்திற்கு அப்பால் அபாயம் குறைவாகக் காணப்பட்ட இடங்களுக்கு தொற்றாளர்கள் குறிப்பிட்டளவினர் பயணித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.