(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்த அரசாங்கம் அதனை புறந்தள்ளி , நாட்டு மக்களையும் ஏமாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

தங்களது விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்ற அதிகாரங்களை  மாற்ற முடியாது - ஜே.சி.அலவத்துவல | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலனத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப் போவதில்லை என வரவு – செலவு திட்ட விவாதத்தின் போதும் , அதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்த அரசாங்கம் , அந்த வாக்குறுதிக்கு முரணாக அதனை இந்தியாவிற்கே வழங்க தீர்மானித்துள்ளது.

இது மாத்திரமின்றி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பல முக்கிய இடங்களை தனியாருக்கு விற்றுள்ளது. இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு செயற்பட்டதில்லை. தேசியத்துவம் பற்றி பேசிய போதிலும் மக்களை ஏமாற்றும் அரசாங்கமே தற்போது உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் பாரிய வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். பருப்பு, வெங்காயம், சீனி மற்றும் அரிசி என்பவற்றுக்கு நிர்ணய விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அரசி விலைகளுக்கு மாத்திரம் இது வரையில் 5 வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சீனிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும் அதன் பயனை பாரிய நிறுவனங்கள் மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளன. அவை சீனி இறக்குமதி வரியில் பாரய மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளனர். துறைக்கு பொறுப்பான அமைச்சரான பந்துல குணவர்தனவிற்கும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலுள்ளார். 

மக்களுக்காக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பல எதிர்பார்ப்புக்களுடன் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் இன்று கவலைக்குரிய நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.