(இராஜதுரை ஹஷான்)

நீர்வளத்தை  பாதுகாக்கும் நோக்கில் " நதி பாதுகாப்பு " செயற்திட்டத்தின் கீழ் 103 ஆறுகளை  அபிவிருத்தி செய்யும் பணிகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. சுற்றாடற்துறை பாதுகாப்பு மற்றும் மீள் எழுச்சிக்கு வரவு- செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றாடற்துறையை பாதுகாக்க புதிய செயற்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீழ்வளத்தை பாதுகாக்க முன்வைக்கப்பட்ட  யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய "நதி பாதுகாப்பு" செயற்திட்டத்தின் கீழ் 103 நதிகள் அபிவிருத்தி செய்யப்படும். ஆற்றுப்படுக்கையில் அதாவது ஆற்றின் கரையோர  விளிம்பின் இரு புறமும் மரங்களை நடல், மற்றும் ஆற்றின் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றல் ஆகிய பணிகள் இச்செயற்திட்டம் ஊடாக முன்னெடுக்கப்படும். 

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி செயற்திட்டத்தின் ஆரம்பகட்ட பணி ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆரம்பிக்கப்படும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அபிவிருத்தி பணிகள், விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறந்த கொள்கை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு  பாதிப்பை ஏற்படுத்தும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தவும், பொலித்தீன் பொருட்களை மீள்சுழற்சி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.என்றார்.