(க.பிரசன்னா)
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஐந்தாவது மாவட்ட வெளியீட்டுக்கிளை அலுவலகமானது, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் நாளை வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமகால அரசாங்கத்தின் சௌபாக்கியா தொலைநோக்கு வேலைத்திட்டத்திற்கு அமைவாக கண்டி மாவட்ட செயலகத்தில் மாவட்ட வெளியீட்டுக்கிளை அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் பிரதேச ரீதியில் நிறுவியுள்ள 5 ஆவது வெளியீட்டு அலுவலகம் இதுவாகும். பதுளை, காலி, அநுராதபுரம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இதற்கு முன்னர் வெளியீட்டு அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

நிதி ஒழுங்கு விதிகள், தாபன கோவைகள் அரசாங்கத்தின் கட்டளைகள், வர்த்தமானி உள்ளிட்ட அரசாங்கத்தின் அனைத்து வெளியீடுகளையும் கொள்வனவு செய்வதற்கு இதற்கு முன்னர் கொழும்பிற்கு செல்ல வேண்டியிருந்தது. அத்தோடு இவ்வாறு பிரதேச ரீதியில் வெளியீட்டு அலுவலகங்களை அமைப்பதன் மூலம் பொது மக்களுக்கு தேவையான அரசாங்கத்தின் வெளியீடுகள், கட்டளைச் சட்டங்கள் முதலானவற்றை பிரதேச ரீதியில் கொள்வனவு செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.