கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

இவ்வாறு, 4 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 29 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  காரை நகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைபடுத்தப்பட்டனர். 

குறித்த சம்பவம், கடந்த திங்கள் கிழமை(14.12.2020) காலை இடம்பெற்றுள்ளது. 

 இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 29 மீனவர்களையும் 4 விசைப்படகுகளையும் கைது செய்ததை கண்டித்து, இன்றுமுதல் மீனவர்களையும் படகுகளையும் இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி,  ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

  மேலும்,  இலங்கையில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் உடல்நலம் குறித்து இந்திய துணை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன், சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளுடன் மீனவர்களை உடனடியாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 

 அத்தோடு, முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மீன்வளத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு மீன்வர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 

 இதனையடுத்தது, மீன்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மீனவர்களை மீட்க இலங்கை இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியதையடுத்து மீனவர்களின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.