( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு, சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்னவை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக அறிவித்தல் அனுப்பியுள்ளது. நாளை 17 ஆம் திகதி சாட்சியம் அளிக்க ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, ஆணைக் குழுவின் செயலர் ஊடாக இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம், சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா  ஜயரத்னவிடம் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அசாத் நவவி சாட்சியம் அளிக்கும் போது அவரது சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018 ஆம் ஆண்டில், பயங்கரவாத புலனாய்வு பிரிவு  தேசிய தெளஹீத் ஜமாஅத்  வலைத்தளம் மற்றும் சஹ்ரான் ஹாஷிம் என்ற நபரின் சமூகவலைத் தள கணக்கை தடை செய்வது குறித்து ஆலோசனை கோரி ஒரு கோப்பை சமர்ப்பித்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் ஆணைக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அஸார்ட் நவவி மற்றும் சிரேஷ்ட அரச சட்டவாதி மாலிக் அஸீஸ் ஆகியோர், டி.ஐ.டி. சமர்ப்பித்த கோப்பில் மிக முக்கியமான ஆவணங்கள் இருக்கவில்லை எனவும், முக்கிய ஆவணங்களை வழங்குவதில் டி.ஐ.டி தவறிவிட்டதாகவும், இதன் காரணமாக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் முறையான சட்ட ஆலோசனையை வழங்க முடியவில்லை என்றும் சாட்சியமளித்திருந்தனர்.

2019 ஜூன் 18 ஆம் திகதி சட்ட மா அதிபர், அப்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதம் அனுப்பியதாகவும் இதன்போது ஆணைக்குழு முன் தெரிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால்  சமர்ப்பிக்கப்பட்ட கோப்பில்  சட்ட ஆலோசனைகளை வழங்க போதுமான தகவல்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் அதில் குறிப்பிடுகிறார்.

சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இக் கடிதம் தொடர்பாக  ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளதாகவும், அதன்படி சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் தங்கள் கடமைகளைச் செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்றும் ஜனாதிபதி சட்டத்தரனி சவேந்ர பெர்னாண்டோ ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தார்.

மேற்கண்ட அறிக்கையை தெளிவுபடுத்தவே சிரேஷ்ட அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.