ஆப்கானிஸ்தானில் நடந்த கார் குண்டு வெடிப்பில் காபூலின் துணை ஆளுனரும் அவரது உதவியாளரும் உயிரழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

துணை ஆளுநர் மஹபூபுல்லா மொஹெபி செவ்வாய்க்கிழமை தனது பாதுகாப்புக் காவலர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாகவே மொஹெபியும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மஹபூபுல்லா மொஹேபியை கொலை செய்யும் நோக்கில் பயங்கரவாதிகள் அவரது காரில் வெடிகுண்டு மறைத்து வைத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை மஹபூபுல்லா மொஹேபி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் ரிமோட் மூலம் காரில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் டோலோ செய்திச் சேவை காபூல் பொலிஸாரை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

குண்டுவெடிப்புக்கு எந்த குழுவும் பெறுப்பேற்காத நிலையில், மொஹெபியின் இரண்டு காவலர்களும் காயமடைந்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் கட்டார் நாட்டில் தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கமிடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததில் இருந்து நாடு முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது.

குறிப்பாக காபூல் - பத்திரிகையாளர்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்களின் கொலைகளின் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் ஒரு பெண் செய்தி தொகுப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார், ஒரு மாதத்திற்குள் கொலை செய்யப்பட்ட இரண்டாவது பத்திரிகையாளர் இவர் ஆவார்.

அது மாத்திரமன்றி தலைநகரில் இந்த மாதத்தில் இரண்டு முறை ராக்கெட் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட கல்வி நிலையங்கள் மீது பெரும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.