(எம்.மனோசித்ரா)

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறுவதன் மூலம் , முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அரசாங்கத்தின் இயலாமை வெளிப்படுகிறது எனத் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார  தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து சடலங்களை மாலைத்தீவிற்கு அனுப்பும் அளவிற்கு சாதாரண மக்களுக்கு வசதிகள் இருக்கின்றனவா எனவும் கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் கொரோனாவுடன் வாழ வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதார நெருக்கடிக்கு தீர்வு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். சீனி இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டதால் 90 தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சீனி ஒரு கிலோ 85 ரூபாவிற்கு எங்கும் இல்லை. வரி குறைப்பின் பயன் மக்களை சென்றடையவில்லை. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

தற்போதைய அரசாங்கத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்புக்களை அவ்வாறே புறந்தள்ளிவிட்டு தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாத்திரமே அரசாங்கம் செயற்படுகிறது என்பது 100 சதவீதம் உறுதியாகியுள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரழக்கின்ற முஸ்லிம்களின் ஜனாசாக்களை மாலைதீவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறுகின்றனர். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முடியாத அரசாங்கத்தின் இயலாமை இதன் மூலம் வெளிப்படுகிறது. இலங்கையிலிருந்து சடலங்களை மாலைத்தீவிற்கு அனுப்பும் அளவிற்கு சாதாரண மக்களுக்கு வசதிகள் இருக்கின்றனவா?

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளுக்கு கொவிட் தொற்று எனக் கூறி தகனம் செய்துள்ளார்கள். இதன் மூலம் மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த குறித்த கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்களா? அடித்துக் கொல்லப்பட்டார்களா என்பது இரகசியமாக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கான மருந்து தொடர்பான விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்பற்று செயற்படுகிறது. வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதிக்கின்ற தடுப்பூசியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அவ்வாறில்லை என்றால் பாரதூரமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற பொருத்தமற்ற செயற்பாடுகள் தொடர்பில் பலமான எதிர்க்கட்சியாக தொடர்ந்தும் நாம் எதிர்த்து போராட தயாராகவுள்ளோம் என்றார்.