(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை முறைமையை " வெள்ளை யானை " என சித்தரிப்பதை  ஏற்றுக்கொள்ள முடியாது. அரச நிர்வாகம் சிறந்த முறையில் அமைய மாகாண சபை முறைமை இன்றியமையாதது  என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை அடுத்த வருடம் முதல் காலாண்டில் நடத்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. பல்வேறு காரணிகளை கொண்டு மாகாண சபை முறைமையை " வெள்ளை யானை " என சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அரச நிர்வாகம் சிறந்த முறையில் செயற்படுவதற்கு மாகாண சபை முறைமை அவசியமாகும். பல மாகாண சபைகளில் மக்களுக்கு சிறந்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை முறைமையை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியது. முறையற்ற விதத்தில் செயற்பட்ட ஒரு சில மாகாண சபைகளினால் சிறந்த முறையில் செயற்பட்ட மாகாண சபைகளுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மாகாண சபை முறைமை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.

மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.மாகாண சபை முறைமை மீண்டும் பலப்படுத்தப்படும். அரச நிர்வாகம் சிறந்த முறையில் இடம் பெறுவதற்கு மாகாண சபைகளின் பங்களிப்பு அவசியமாகும் என்றார்.