(செ.தேன்மொழி)

உயர் நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 3 குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு - புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தின் கீழ் மாடியில் இன்று செவ்வாய்கிழமை  மாலை 4.30 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. 

இந்த தீப்பரவலை தீயணைப்பு படையினரும் விமானப்படையினரும் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதன்போது கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு கருவிகள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தன.

தீப்பரவல் காரணமாக நீதிமன்றத்தின் ஆவணங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,  பயன்படுத்த முடியாத தேவையற்ற பொருட்களை களஞ்சியப்படுத்தியிருந்த களஞ்சியசாலையிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இந்த தீப்பரவலுக்கான காரணம் தொடர்பில் கண்டறிவதற்காக குற்றப்புலானிய்வு பிரிவின் அதிகாரிகளைக் கொண்ட மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதேவேளை சம்பவ இடத்தில் குற்றவியல் ஸ்தலபரிசோதகர்களும், அரச பரிசோதகர்களும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த தீபரவல் தொடர்பில் மின் பொறியியலாளர் ஒருவரிடமும்  ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் குறித்த தீப்பரவல் எவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது தொடர்பிலே தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.