(எம்.ஆர்.எம்.வஸீம்)

20ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு கிடைத்திருக்கும் அதிக பலம் மற்றும் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பவற்றால் அரசாங்கம் நினைத்தபடி செயற்படுகின்றது. 

யானை சின்னமே சிறந்தது'': ருவன் விஜேவர்த்தன | Virakesari.lk

இவ்வாறான நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்தில் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரை ஜனவரியில் நிச்சயமாக பெயரிடுவோம் என ஐக்கிய தேசிய கட்சி பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது. அதுதொடர்பில் கட்சி ஆதரவாளர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றோம். அதற்காக மாவட்ட மட்டத்தில் சந்திப்புக்களை நடத்திவருகின்றோம். கட்சியை மீண்டும் கட்டியெழுப்பவேண்டும் என்ற ஆரவம் ஆதரவாளர்களிடம் தற்போது அதிகரித்திருப்பதை அவர்களுடன் கலந்துரையாடும் போது எமக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. குறுகிய காலத்தில் கட்சியை பழைய நிலைக்கு கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அத்துடன் தற்காலத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் அவதானித்து வருகின்றோம். வரவு செலவுத்திட்ட விவாதங்களின்போது   பாராளுமன்றத்தில்  உறுப்பினர்கள் மோசமான  வார்த்தை பிரயோகங்களால் ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்வதை காணமுடிந்தது. அவர்களின் செயற்பாடுகள் கவலையளிக்கின்றன. 

பாராளுமன்றம் நகைப்புக்குள்ளாகி இருக்கின்றது.  மக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் சபாநாயகர் மற்றும் சில உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பாணி குடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

மக்கள் எமக்கு பாராளுமன்ற வரம் அளிக்கவில்லை. அதனால் நடப்பதை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். என்றாலும் பாராளுமன்றத்தில் எமது குரலை எழுப்புவதற்கு தற்போது நேரம் வந்திருக்கின்றது. அதனால் எமது கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்திற்கு உறுப்பினரை நியமித்து நிச்சயமாக ஜனவரியில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். 

அத்துடன் 20ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதிக பலம் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. அதேபோல் அரசாங்கத்துக்கும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. அதனால் அரசாங்கம் நினைத்தவாறு செயற்பட ஆரம்பித்திருக்கின்றது. பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரம் அரசாங்கத்துடன் மோத முடியாது. அதனால் அரசாங்கத்துடன் மோத பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும் என்றார்.