(எம்.ஆர்.எம்.வஸீம்)

சரியான தீர்மானங்களை நிலைநாட்ட பொலிஸார் அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்கு  அச்சப்படத்தேவையில்லை. அதற்காக நான் முன்னிற்பேன் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொலிஸ் திணைக்களத்தை நான் பொறுப்பேற்கும் போது சிலர் என்னிடம் வந்து, அதனை பொறுப்பேற்பதற்கு முன்னர் சுத்தப்படுத்திய பின்னர் பொறுப்பேற்குமாறு தெரிவித்தனர். பொலிஸை சுத்தப்படுத்த எதுவும் இல்லை. பொலிஸ் இல்லாமல் நாட்டில் 3நாள் இருக்க முடியுமா என நான் அவர்களிடம் கேட்டேன். பொலிஸார் தொடர்பில் பொது மக்கள் பிழையாக பேசுவதற்கு உங்களைப் போன்றவர்களும் காரணம் என அவர்களுக்கு தெரிவித்தேன். 

பொலிஸார் எப்போதும் சரியான விடயங்களை செயற்படுத்த பின்வாங்கக்கூடாது. எந்த அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும் அச்சப்படத்தேவையில்லை. அதுதொடர்பில் நான் உங்களுடன் இருப்பேன். பொலிஸ் சேவையை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வதே எனது நோக்கமாகும். உலகில் இருக்கும் நவீன ஆயுதங்கள் இருந்தாலும், அதனை செயற்படுத்த முடியாவிட்டால், அதில் பயனில்லை. 

அதனால் எந்தவிடயமாக இருந்தாலும் என்னிடம் அல்லது செயலாளரிடம் கலந்துரையாடுங்கள். நாங்கள் ஒருபோதும் பொலிஸாரை காட்டிக்கொடுக்கமாட்டோம். 

நம்பிக்கையுடன் செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். பொலிஸாரின் எந்த தவறு ஏற்பட்டாலும், அது பொலிஸாரின் தவறு என சொலித்திரிய மாட்டேன். அதன் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன். அவ்வாறான நிலைமை ஏற்படமால் பாதுகாத்துக்கொள்வது எம் அனைவரதும் பொறுப்பாகும் என்றார்.