(க.பிரசன்னா)

நாட்டிலுள்ள நீதிமன்ற கட்டமைப்புக்குள் சுமார் 8 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் சிறைச்சாலைகளிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு தேவையான இடத்தை வழங்குவதற்காக நீதி அமைச்சை புதிய இடத்துக்கு மாற்றுவது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2019 ஆம் ஆண்டு மத்திய கால பகுதியளவில் முழு நாட்டிலும், நீதவான் நீதிமன்றங்களில் சுமார் 5 இலட்சம் வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட வழக்குகளும், மேல் நீதிமன்றத்தில் 25,000 இற்கும் மேற்பட்ட வழக்குகளும், சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றங்களில் சுமார் 7,500 வழக்குகளும், மேல் முறையீட்டு நீதி மன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் சுமார் 5,000 வழக்குகளும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. 

வழக்கு தாமதத்தினால் நாட்டின் மொத்த நீதி மன்றங்களிலும் தேங்கிக்கிடக்கும் சுமார் 8 இலட்சம் வழக்குகள் இருப்பது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

இந்த பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்கு தீர்வு என்ற ரீதியில் எதிர்வரும் 05 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் நீதி மன்றங்களின் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பதற்கும், நீதி மன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதற்கமைவாக அதிகரிப்பதை இலக்காகக்கொண்டு, விரைவாக செயற்றிறன் மிக்க வேலைத்திட்டம் ஒன்று நீதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கமைவாக துணைக்குழு ஒன்றை நியமித்து தேவையான நடவடிக்கைகளும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதி நிருவாகத்தின் செயற்பாடுகளில் மேலும் செயற்றிறனுடனும், பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள நிலைமையை ஏற்படுத்தும் மிக சிரமமான இலக்கை பூர்த்தி செய்வதற்காக, அரசாங்கத்தினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் உயர் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் 14 இனால் அதிகரிக்கப்படுகிறது.

இதற்கமைவாக உயர் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதிமன்ற அலுவல்கள், புதிதாக நியமிக்கப்படும் நீதிபதிகளின் தேவைகளுக்காக புதிய நீதிமன்றங்களை ஸ்தாபித்தல், நீதிபதிகளுக்கு உத்தியோகப்பூர்வ இருப்பிட வசதிகளை வழங்குதல், ஆவணங்களை வைத்திருப்பதற்கான வசதி மற்றும் ஏனைய தொடர்புப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளுக்கான இடவசதியை வழங்கும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வசதிகளை வழங்குவதற்காக உயர் நீதிமன்ற கட்டிட தொகுதியை பகுதிகளாக பிரித்து, தேவையற்ற வகையில் வேறொரு இடத்திற்கு கொண்டுசென்று ஸ்தாபிக்கப்பட்டால் நீதிபதிகளுக்கும், நீதிமன்ற ஊழியர்களுக்கும், நீதிமன்ற பதிவாளர் அலுவலக பணிகளுக்கும், சட்டத்தரணிகள் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தை கவனத்திற் கொண்டு அதற்கான தீர்வு என்ற ரீதியில், நீதிமன்ற அமைச்சு அமைந்துள்ள வளாகத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட இடவசதிகளை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் மீயுயர் கட்டிட முகாமைத்துவ சபை மற்றும் நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரை மற்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நீதியமைச்சு என்பது 350 ஊழியர்களை கொண்ட பாரிய நிறுவகமாவதுடன் அமைச்சுடன் இணைக்கப்பட்டதாக 17 நிறுவகங்கள் செயல்படுகின்றன. 

இதில் நீதியமைச்சுடன் எப்பொழுதும் அமைந்திருக்க வேண்டியது சட்டமா அதிபர் திணைக்களம், திருத்த சட்ட வரைபு திணைக்களம், நீதிமன்ற சேவை ஆணைக்குழு, சட்டத்தரணிகள் சங்கம் ஆகியனவாகும். 

இவை நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு அருகாமையில் அமைந்திருப்பது மிகவும் முக்கியமான விடமயமாகும்.

இதற்கமைவாக நீதியமைச்சு தற்பொழுது அமைந்துள்ள இடத்தில் இருந்து அகற்றுவது பிரச்சினைக்குரிய நிலைமை ஒன்றை ஏற்படுத்தியபோதிலும், எதிர்வரும் சில வருடங்களில் நீதிமன்ற கட்டமைப்புக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி மற்றும் அதன் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் நிவாரணத்தை வழங்குவதற்காக, தற்பொழுதுள்ள கட்டிட தொகுதியை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழங்கி, வேறு இடத்திற்கு செல்வதைத்தவிர செய்யக்கூடிய மாற்று வழி எதுவும் இருக்கவில்லை.

உயர் நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டு நீதி மன்றங்களில் பணிகளை விரிவுப்படுத்துவதுடன், தேவையான வசதிகளை முழுமைப்படுத்துவதற்கு பாரிய மேலதிக நிதி செலவாகும் விடயமும்  கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக மாதாந்த வாடகையாக 9.8 மில்லியன் ரூபாவை செலுத்தி மொத்த நீதியமைச்சையும் உலக வர்த்தக மத்திய நிலையத்தில் ஸ்தாபிப்பது இலக்காகக் கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.