(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்ட இரண்டு நிபுணர் குழுக்களின் அறிக்கையினை அடிப்படையாக கொண்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும். 

கிழக்கு கொள்கலன் முனையம்: தீராக் குழப்பம் | Virakesari.lk

மக்களாணையை மீறி  அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என துறைமுக அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு அபிவிருத்தி செய்யப்படவில்லை.2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் துறைமுகத்தில் ஒரு முனையம் மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த்து.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி காலத்தில் கொழும்பு துறைமுகம் உட்பட பிரதான துறைமுகங்கள் குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்க தீர்மாணித்து ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

தேசிய வளங்களை  பிற நாட்டவர்களுக்கு வழங்க போவதில்லை என்று நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளோம். மக்களாணைக்கு முரணாக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது.

 கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உள்ளூர் முதலீட்டாளர்களால் தற்போதைய சூழ்நிலையில் முனையத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. என்ற காரணியால் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க ஆரம்ப கட்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிழக்கு துறைமுகத்தில் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கேற்ப வகையில் முனையம் அபிவிருத்தி செய்யப்படும்.

கிழக்கு முனையம் தொடர்பில் துறைமுக அதிகார சபை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சு மட்டத்தில் இரண்டு குழு நியமிக்கப்பட்டுள்ளன.

குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இறுதி தீர்மானம்  எடுக்கப்படும். கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு இரகசியமான முறையில் வழங்கியதை போன்று தற்போதைய அரசாங்கம் கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு இரகசியமான முறையில் வழங்காது. கிழக்கு முனையத்தின் அதிக உரிமம் துறைமுக அதிகார சபையிடமே காணப்படும் என்றார்.