இலங்கை வாழ்வியலுக்குள்ளே விளையாட்டையும் விதைத்து விளைவிக்கும் தேசம். இங்கு 'பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி' என்று பாரதி பாடியது போல எம்மவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் பந்தாகவே தெரிவதுண்டு. படிக்கும் புத்தகங்களும் பேப்பர்களும் கூட துடுப்பு மட்டையாகவும் பந்தாகவும் மாறிவிடும் மாயாஜாலங்கள் அடிக்கடி காணக்கிடைப்பதுண்டு.
வடக்கின் கரையோரப்பகுதிகளில் சீரான தூரத்தில் இருக்கும் பனைகளை பழைய மீன்வலைகொண்டு இணைத்து உருவாக்கப்பட்ட கரப்பந்தாட்டக்கூடங்கள் ஏராளம் உள்ளன.
இன்றளவில் இலங்கை முழுவதும் கிரிக்கெட் பேசப்படுகிறது. ஒரு யாழ் வீரனின் அறிமுகம் சர்வதேசத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் தேசிய விளையாட்டு என்று மார்தட்டப்படும் கரப்பந்தாட்டத்திற்கு அங்கீகாரமோ, அடையாளமோ எட்டாக்கனியாகவே உள்ளது.
காலம் சுழன்றோடிப்போகும் வேகத்தில் இலங்கையில் கிரிக்கெட்டின் நிழலில் மற்றைய விளையாட்டுக்கள் மறைந்துவிடக்கூடாது. இலங்கை விளையாட்டு வரலாற்றின் புதிய திருப்புமுனையாய் யாழ் மாவட்டக் கரப்பந்தாட்ட சங்கம் ஒரு 'ரௌண்ட் ரொபின்' முறையிலான சுற்றுத்தொடரை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
யாழ் கரப்பந்தாட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கும் இத்தொடர் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வதற்காக யாழ் மாவட்டக் கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ரவிவர்மன் அருமைக்கிளியை வீரகேசரிக்காக பிரத்யேகமாக நேர்காணல் செய்திருந்தோம்.
'ஜப்னா ஸ்டாலியன்ஸ்' அணியின் வருகைக்குப் பின்னர் யாழ்மண்ணில் விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பலகாலமாகப் பேசப்படாமலிருந்த கபடி Pசழ முயடியனi டுநயபரந ஆரம்பித்த பின்னர் கிரிக்கெட்டுக்கு அடுத்தது அதிகம் பேசப்பட்ட தொடராக மாறியிருந்தது. இதேபோல யாழில் கரப்பந்தாட்டமும் மாறவேண்டும் என்ற ஆர்வத்தோடு நேர்காணலை ஆரம்பித்தோம்.
கேள்வி : வணக்கம் ரவி! யாழ் மாவட்டக் கரப்பந்தாட்ட சங்கத்தினுடைய தற்போதைய நிலை என்ன? உங்களுக்குக் கீழ் எத்தனை கழகங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? உங்களுடைய செயற்பாடுகள் என்ன?
பதில் : யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் காற்பந்தாட்டத்திற்கு ஒரு பெரும் ரசிகர் வட்டம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகக் கரப்பந்தாட்டத்திற்கு தற்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. கடைசியாக நடந்த டயலொக் சுற்றுலீக்கின் இறுதிப்போட்டிக்குச் சென்றுபார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கிருந்த ரசிகர்களை விட, நாங்கள் யாழ்ப்பாணத்தில் நடத்துகின்ற கழகங்களுக்கு இடையிலான போட்டிகளின் இறுதிப்போட்டிகளுக்கு வருகைதருகின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்திருக்கிறது.
எங்களிடம் பதிவுசெய்துள்ள கழகங்களைப் பொறுத்தவரையில், அவற்றில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆண்கள், பெண்கள் என்ற இரு பிரிவுகளுக்கும் ஏ டிவிஷன், பி டிவிஷன் என்று தரப்படுத்தல்கள் காணப்படுகின்றன. இலங்கையிலேயே கழகமட்டங்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம்தான் இவ்வாறான தரப்படுத்தல் காணப்படுகிறது. எங்கள் சங்கத்தின்கீழ் 60 இற்கும் அதிகமான கழகங்கள் பதிவுசெய்திருந்தாலும், சுமார் 40 கழகங்கள் இயங்குநிலையில் இருந்துவருகின்றன. இவ்வளவு கழகங்கள் இருந்தாலும் எங்களுடைய அணிகளைத் தேசிய ரீதியில் ஒப்பிட்டுப்பார்க்கும் போது உண்மையிலேயே மிகமோசமான நிலையில் தான் இருக்கின்றன. எனவே அதனை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதே தற்போது எமது சங்கத்தின் முக்கிய இலக்காகக் காணப்படுகின்றது.
கேள்வி : இப்போது நீங்கள் 'வீ லீக்' என்ற ஒரு சுற்றுத்தொடரை அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்புக்களை வெளியிட்டிருக்கிறீர்கள். இதனை ஐ.பி.எல் பாணியில் 8 அணிகளைக்கொண்டு நடத்தவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறீர்கள். இதற்கான வரவேற்பு எவ்வாறிருக்கிறது? தற்போதைய சூழ்நிலையில் இதனை நடத்துவது சாத்தியமா?
பதில் : ஐ.பி.எல் தொடங்கிய காலகட்டத்திலேயே ஆவரங்கால் இந்து இளைஞர் மன்றத்தினால் 'ஹிந்து பிரீமியர் லீக்' என்று சொல்லப்படுகின்ற ஒரு தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நிதிப்பிரச்சினை, அனுசரணையாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அவர்களால் அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல்போனது.
அதற்குப்பிறகு யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட்டுக்கு என்.ஈ.பி.எல், ஜே.எஸ்.எல், ஜே.பி.எல், ஜி.பி.எல் போன்ற தொடர்கள் வந்ததன் பின்னர் கரப்பாந்தட்டத்திற்கான தொடர்கள் நீண்டகாலமாக இடம்பெறவில்லை. நாங்கள் சங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்தே கரப்பந்தாட்டத்திற்கு ஒரு தொடரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது. எங்களிடம் 40 அணிகள் இருந்தாலும், அவ்வளவு பெரிய இலக்கத்தை வைத்துக்கொண்டு ஒரு தரமான போட்டித்தொடரை எங்களால் ஒழுங்குபடுத்த முடியாமல் இருக்கிறது.
ஆனால் ஐ.பி.எல் அல்லது எல்.பி.எல் பாணியில் (Franchise based) ஒரு தொடரை அறிமுகப்படுத்தும் போது இதற்குள் 8 அணிகளை மாத்திரம்தான் உள்ளடக்கப்போகின்றோம். அந்த அணிகளுக்கான போட்டிகளையும் அந்தந்த பிரதேசங்களிலுள்ள மைதானங்களிலேயே நடத்தப்போகின்றோம். இதன் நோக்கம் அங்கிருக்கின்ற இளைஞர்களும் சிறுவர்களும் இந்த விளையாட்டை நேரடியாகப் பார்த்து, அதனைநோக்கி ஈர்க்கப்பட வேண்டும் என்பதேயாகும். அத்தோடு 40 அணிகளில் விளையாடுகின்ற வீரர்களை 8 அணிகளுக்குள் சுருக்கும்போது போட்டின் தரம் உயரும். அத்தோடு ஏலம் மூலமாக வீரர்களைப் பிரிக்கும்போது அணிகளுக்கிடையில் சமநிலையும் பேணப்படும். மேலும் அந்த 8 அணிகளும் தரமான பயிற்றுவிப்பாளர்களின் கீழ் சரியான பயிற்சிகளை மேற்கொண்டு, தொடரில் விளையாடும்போது மிகப்பெரிய அனுபவத்தை வீரர்களால் பெற்றுக்கொள்ள முடியும். இது போட்டியைப் பார்ப்போரின் ஆர்வத்தையும் அதிகரிப்பதுடன் வீரர்களை கரப்பந்தாட்டத்தை நோக்கி ஈர்க்கும்.
அணிகளின் உரிமையாளர்கள் எவ்வளவு தூரம் முதலீடு செய்யத்தயாராக இருக்கிறார்களோ, அவ்வளவு தூரம் போட்டியின் தரத்தை அதிகரிக்கலாம் என்பதால் நாம் அதனையே உரிமையாளர்களிடமிருந்து குறிப்பாக எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையில் இவ்வாறான தொடரொன்று இல்லாத காரணத்தால் தேசிய வீரர்கள் கூட இங்கே வந்து விளையாடத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இதற்கு அனுசரணையாளர்களும் முதலீட்டாளர்களும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறில்லாவிட்டால் இவ்வருடம் இத்தொடரை யாழ்ப்பாணத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தி நடத்திவிட்டு, எதிர்காலத்தில் தேசிய வீரர்களையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி : யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கிரிக்கெட், காற்பந்து மைதானங்களை விடவும் அதிகமான கரப்பந்தாட்ட மைதானங்கள் இருப்பதை அவதானிக்கமுடிகிறது. ஆனால் பாடசாலை மட்டங்களில் கரப்பந்தாட்டம் மீதான ஆர்வம், தரமான கரப்பந்தாட்ட அணிகள் என்பன இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது பாடசாலை மட்டத்தில் கரப்பந்தாட்டம் மீதான பார்வை எப்படியிருக்கிறது?
பதில் : கரப்பந்தாட்டம் மீதான ஆர்வம் குறைவென்று கூறமுடியாது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சில குறிப்பிட்ட பகுதிகளில் மாத்திரம் ஆர்வமுள்ள வீரர்கள் செறிவாகக் காணப்படுகிறார்கள். உதாரணமாக கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவை எடுத்துக்கொண்டால், அங்கே அதிகமான கழகங்களும் பாடசாலைகளும் கரப்பந்தாட்டம் விளையாடுவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கும். அதைவிட பாடசாலைகளைப் பொறுத்தவரை, அணிகள் இருந்தாலும் அவர்களுக்கான போட்டித்தொடர்கள் போதியளவில் இல்லை. பாடசாலைகள் நடத்துகின்ற போட்டித்தொடர்கள், டி.எஸ்.ஐ நடத்துகின்ற போட்டித்தொடர் ஆகியவற்றைத் தவிர யாழ்ப்பாணத்தில் வேறு கரப்பந்தாட்டப்போட்டிகள் நடத்தப்படுவதில்லை. இதற்கான தீர்வாக 14 வயதிற்குட்பட்டோர் மற்றும் 16 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளைப் பாடசாலை மட்டத்தில் நடத்துவதற்கு நாம் திட்டமிட்டுவருகின்றோம். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இப்போது எங்களால் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட முடியாதுள்ளது. நிச்சயமாக அவை குறித்தும் விரைவில் அறிவிப்போம்.
அதேபோல பாடசாலைகளுக்கு இடையில் கிரிக்கெட்டுக்கு நடைபெறும் 'பிக்மெட்ச்' பாணியில் போட்டித்தொடர்களை நடத்தவுள்ளோம். இதனை நடத்துவதால் பாடசாலைகளிலுள்ள பெருமளவான மாணவர்கள் மத்தியில் கரப்பந்தாட்டம் பற்றி விழிப்புணர்வும் ஆர்வமும் ஏற்படும். இவ்வாறான திட்டங்களை முன்னெப்பதற்கு எமக்கிருக்கின்ற முக்கியமான தடங்கல் அனுசரணையாளர்களே.
கேள்வி : நீங்கள் அனுசரணையாளர்களே பிரச்சினை என்று கூறுகின்றீர்கள். ஆனால் அனுசரணையாளர்கள் தேடிவரவேண்டுமாக இருந்தால், அந்த விளையாட்டின் தரம் சிறப்பாக இருக்கவேண்டும். தரமான பயிற்றுவிப்பாளர்களும் பயிற்சியும் இருக்கவேண்டும். யாழ்ப்பாணத்தில் இவை இருக்கின்றனவா?
பதில் : யாழ்ப்பாணத்தில் கரப்பந்தாட்டத்தை மேம்படுத்துவதில் இருபெரும் சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது ஒரு உள்ளக விளையாட்டரங்கு இல்லை. ஏனெனில், வெளிமாவட்டங்களுக்கு போட்டிகளுக்குச் செல்லும்போது இது ஒரு உள்ளக விளையாட்டாகவே பார்க்கப்படுகின்றது. மைதானம், பந்து, காலணி என அனைத்திலும் வேறுபடுகிறது. ஆனால் எங்களுடைய வீரர்கள் பலர் இன்னுமே காலணி அணியாமல் விளையாடிப் பழக்கப்பட்டவர்கள். அவர்கள் அதற்குப் பழக்கப்படுவதற்கு ஏற்ற சூழலும் நேரமும் தேவைப்படுகின்றது.
இரண்டாவது எம்முடைய விளையாட்டு பாணி. எங்களுடைய பாணிக்கும் தெற்கில் விளையாடப்படும் பாணிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அந்த முறைமையையும் நுட்பங்களையும் பழகிக்கொள்வதற்கு எமக்கு ஒரு அனுமதிபெற்ற பயிற்றுவிப்பாளர் தேவை. அப்படியொருவர் இருந்தாலும் சில நாட்களுக்கு மாத்திரம் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதன் ஊடாக அவற்றைப் பழகிக்கொள்ள முடியாது. சுமார் 6 மாதம் தொடக்கம் 2 வருடம் வரையில் இந்த அணிகளுடனேயே இருந்து அவர்களை வழிப்படுத்த வேண்டும். அந்தக் காலப்பகுதியில் வீரர்களைப் போன்றே பயிற்றுவிப்பாளர்களையும் அவர் தயார்ப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே எதிர்காலத்தில் ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியும்.
இதுகுறித்து தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்திடம் கோரிக்கையை முன்வைத்தபோதும், தாங்கள் இதுவரை காலமும் எந்தவொரு மாவட்டத்திற்கும் அவ்வாறு தனியொரு பயிற்றுவிப்பாளரை ஒழுங்கமைத்துக் கொடுக்கவில்லை என்ற பதிலே கிடைக்கின்றது. இவற்றையெல்லாம் தாண்டி, நாங்களே ஒரு பயிற்றுவிப்பாளரை அமர்த்திக்கொள்வதே எங்களால் செய்யக்கூடியதாகும். ஆனால் நீண்டகாலத்திட்டத்தோடு ஒருவரை நியமிப்பதற்கு பொருளாதார ரீதியில் எங்களுடைய சங்கம் பலமானதாக இல்லை. இந்த செலவுகளைப் பொறுப்பேற்று தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ யாழ்ப்பாணத்தில் இந்த விளையாட்டை வளர்ப்பதற்கு முன்வருவார்களாக இருந்தால், அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு எங்களுடைய சங்கம் தயாராக இருக்கின்றது. இதன்மூலம் இரண்டு வருடங்களுக்கு எம்மால் ஒரு பயிற்றுவிப்பாளரை நியமிக்கக்கூடியதாக இருந்தால், நிச்சயமாக மிகக்குறுகிய காலத்தில் அதன் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
கேள்வி : தற்போதைய சூழ்நிலையில் தேசிய அணிக்காக வடமாகாண வீரர்கள் யாரேனும் விளையாடுகின்றார்களா? அவ்வாறு தேசிய அணியில் இடம்பெறவேண்டுமாயின் அவர்கள் என்ன செய்யவேண்டும்?
பதில் : இப்போதிருக்கின்ற நிலைமையில் சுப்பர் லீக் என்று சொல்லப்படுகின்ற தொடரில்கூட கலைமகள் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த கௌசிகன் என்ற வீரர் மட்டும்தான் இலங்கை விமானப்படையணிக்காக விளையாடிக்கொண்டிருக்கிறார். அவரும் இளைஞர் சம்மேளன குழாமிலிருந்து தான் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். இவ்வாறு மற்றைய வீரர்களும் விளையாடவேண்டுமானால், அதற்கான வளங்களை நாங்கள் வீரர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அதிலே முதலாவது உள்ளக விளையாட்டரங்கு. இப்போது உள்ளக விளையாட்டரங்கில் விளையாட வேண்டுமானால் நாங்கள் கிளிநொச்சிக்குத் தான் செல்லவேண்டியிருக்கிறது. பல்கலைக்கழகத்திலும் ஒரு உள்ளக விளையாட்டரங்கு இருக்கிறது. அதை வெளிப்பாவனைக்கும் தருவதாகக் கூறியிருக்கிறார்கள். ஆனால் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.
கேள்வி : 'வீ லீக்கை' எந்தக் காலப்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறீர்கள்? அதற்கான தயார்ப்படுத்தல்கள் எவ்வாறிருக்கின்றன?
பதில் : இந்தத் தொடரைப் பொறுத்தவரை, இந்த மாதத்தின் கடைசிப்பகுதி இல்லாவிடின் ஜனவரி முற்பகுதியில் வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். அதனைத்தொடர்ந்து மார்ச்மாத இறுதிக்குள் 8 அணிகளோடு இந்தத் தொடரை நடத்திமுடிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தத்தொடரின் ஊடாக அனைத்துப்பிராந்தியங்களிலும் எங்களால் கரப்பந்தாட்டத்தை வளர்க்கமுடியும் என்பதே எங்களுடைய நம்பிக்கை.
கேள்வி : இந்த 8 அணிகள் எவையென்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறதா? இல்லாவிட்டால் வரப்போகின்ற உரிமையாளர்களுக்கு ஏற்றவாறு அணிகள் தீர்மானிக்கப்படுமா?
பதில் : இந்த அணிகளைப் பொறுத்தவரை எம்மிடம் இருக்கின்ற எதிர்பார்ப்பு என்னவென்றால் யாழ்மாவட்டத்தில் 5 கல்வி வலயங்கள் இருக்கின்றன. அதை மையப்படுத்தியே இந்த அணிகளை நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். எவ்வாறென்றால் யாழ்ப்பாணம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், வலிகாமம் ஆகிய 5 பிராந்தியங்களிலும் கட்டாயம் ஒவ்வொரு அணிகள் இருக்கும். மேலதிகமாக எஞ்சுகின்ற 3 அணிகளும் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படும். கோப்பாயை பொறுத்தவரை 2 அணிகள் இருப்பதை நாங்கள் விரும்புகின்றோம். இதற்கு அங்குள்ள கரப்பந்தாட்ட அணிகளின் எண்ணிக்கை ஒரு முக்கிய காரணமாகும்.
எப்போதுமே ஆரம்பம் என்பது எல்லா தொடர்களுக்கும் மிகக்கடினமான படிமுறை. பலகாலமாக ஒரு லீக் தொடர் இல்லாமலிருந்த யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த தோர் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாய் அமையும் என்பதில் ஐயமில்லை. ஆனால் முதலீட்டாளர்கள் இல்லாமல் விளையாட்டைப்பொறுத்தவரை எதுவுமே சாத்தியமில்லை. இந்தியாவில் இறுக்கிமடம் தெரியாமலிருந்த கபடி வீரர்கள் ஒரே தொடரால் எப்படி உலகெலாம் பேசப்பட்டார்களோ அது போல யாழ் கரப்பந்தாட்ட வீரர்களும் இந்த தொடரால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். இதற்கு முதலீட்டாளர்களும் ஊடகங்களும் தங்கள் பங்களிப்பை வழங்கினால் நிச்சயம் அத்தனை விளையாட்டுக்கும் சம அந்தஸ்த்து கிடைக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.
நேர்கண்டவர் - சிவச்சந்திரதேவன் சஜிஷ்ணவன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM