இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோருக்கிடையில் 14.12.2020 இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ் - காங்கேசன் துறையில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நாளைய தினம் முல்லைத்தீவில் மீனவர்களால் மேற்கொள்ளப்படவிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் பேசப்பட்டது.

இக்கலந்துரையாடல் மாவை சேனாதிராசா கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவிலிருந்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தலைமையிலான குழுவினர் என்னோடு சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

இச்சந்திப்பிலே முல்லைத்தீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் பேசப்பட்டது.

அதிலும் குறிப்பாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழிலால் முல்லைத்தீவு மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், நாளையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடபெறவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கெதிரான எமது மக்களின் போராட்டம் வெற்றிபெறவேண்டும். அந்தவகையிலே இப் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்பிரச்சினை முற்றாக நீங்கவேண்டும். எமது மீனவர்கள் தமது கடற்பரப்பிலே நிம்மதியாக தொழிலை மேற்கொண்டு அவர்கள் தமது வாழ்வாதாரத்தினை பெருக்கிக்கொள்ளவேண்டும்.

இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை என்பது நீண்ட காலமாக நிலவிவருகின்றது. இது தொடர்பிலே பலதடவைகள் நாம் உரியவர்ளுடன் விவாதித்திருக்கின்றோம்.

தொடர்ந்தும் இப்பிரச்சினை தொடர்பிலே இந்தியத் தரப்புக்களுடன், குறிப்பாக இந்திய அமைச்சுக்கள், தலைமை அமைச்சிடமும் இது தொடர்பில் விவாதிப்போம் என்றார்.