சமூகமொன்றின் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புக்கள் அதிகமாகும். அவர் தனி மனிதரல்லர். குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதிகள், அவர்களின் குரல்கொடுப்பவர்களாகவும், பொறுப்புக் கூறுபவர்களாகவும் உள்ளனர். சமூகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேசவும், அவற்றைப் பெற்றுக் கொடுக்கவும் கடமைகளை உடையவர்கள். இனங்களின் ஒற்றுமைக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும்  பணியாற்ற வேண்டியவர்கள்.

பொறுப்புக்கள் இவ்வாறு இருக்கையில், இத்தகைய பொறுப்புக்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றுகின்றார்களா ஆகக் குறைந்தது அதற்கு முயற்சி செய்கின்றார்களா என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். இக்கேள்விக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றவில்லை என்ற கறைகளையே விடைகளாக வழங்க வேண்டியுள்ளது. இவர்கள் தங்களின் சுயதேவைகளையும், தங்களைச் சூழவுள்ளவர்களின் தேவைகளையுமே நிறைவேற்றுகின்றார்கள். 

முஸ்லிம் அரசியல் கட்சிக்கும், அவர்களின் குரலாகவும் இருப்போம் என்றும் எதனையும் தியாகம் செய்வதற்கும் தயங்கமாட்டோமென்று வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள், சமூகத்தை வாழ வைக்காது, பேரினவாதிகளை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

‘நக்குண்டார் நாவிழந்துள்ளார்கள்’ கதையாக முஸ்லிம் பிரதிநிதிகள் பேரினவாதத்திடம் சரணடைந்துள்ளனர். இதனை காணுகின்றபோது கவலை கடந்து இவர்களா எமது பிரதிநிதிகள் என்று பகிரங்கமாக கூறுகின்ற தருணங்களில் முகச்சுழிப்பையே ஏற்படுத்துகின்றது. 

குரல் கொடுப்பது யார்?
முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியாக அநாதை நிலையை அடைந்துள்ளது. முஸ்லிம்களின் சார்பில் முஸ்லிம் கட்சிகளிலும், பேரினவாதக் கட்சிகளிலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களில் எதிர்க்கட்சியிலுள்ள முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம்களுக்காக பேசுகின்றார்கள். அதேவேளை, கடந்த ஆட்சியில் இவர்கள் ஆளுந் தரப்பாக இருந்த போது சமூகத்திற்காக குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே வேளை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தின் அடிப்படை உரிமைகள் குறித்து பேசுவதற்கு நாவிழந்து நிற்கின்றார்களா என்று வினாத்தொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொவிட் 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முஸ்லிம்களின் முயற்சிகள் யாவும் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் கூட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தின் அடிப்படை உரிமைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசாதிருக்கின்றார்கள். 

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உட்பட எதிர்க்கட்சியிலுள்ள சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம்களுக்காக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்று மொழிகளிலும் பேசக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். போராட்டக் குணங்கள் நிறைந்தவர்களும் உள்ளார்கள். இவர்களின் இத்திறமைகள் எதனையும் பாராளுமன்றத்தில் காட்டுவதில்லை. 

பாராளுமன்றத்தில் பேச வேண்டியதை பாடசாலைகளின் விழாக்களிலும், பத்திரிகை அறிக்கைகளிலும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்காக பேச முடியாத பிரதிநிதிகளை முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று சொல்லுவதில் எந்தப் பெருமையும் கிடையாது. 

முஸ்லிம்களுக்காக சகோதார சமூகத்தின் உறுப்பினர்கள் பேசுகின்றதால், முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் தான் இருக்க வேண்டுமா என்று சமூகம் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  பயனில்லாத எந்தப் பொருளையும் புத்திசாலிகள் வைத்திருப்பதில்லை. 

முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் தவறு செய்து கொண்டே வருகின்றது. முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான  சக்திகளை பலப்படுத்துவதற்கே துணையாக செயற்பட்டு வருகின்றமையானது துர்ப்பாக்கிய நிலைமையாகும்.

முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாதவர்கள் முஸ்லிம்களுக்காக பேசுகின்ற போது, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சமின்றி பாராளுமன்றக் கதிரைகளை சூடேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்ற போது, புலிகளின் காலத்தில் நடந்த பழைய கதைகளை தூசு தட்டுகின்றார்கள். அவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்து கொண்டிருப்பதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆனால், நமது வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பாராளுமன்றத்தில் வாயடைத்து இருப்பதனைப் பற்றி சிந்திப்பதில்லை. முஸ்லிம்களின் கொவிட்19 ஜனாஸாவை அடக்கம் செய்வது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பேசியதனை முஸ்லிம்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

இதனையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். சாணக்கியனின் பேசியதில் உள்நோக்கம் உள்ளதாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாணக்கியன் பேசியதில் உள்நோக்கம் இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் முக்கியமானதைப் பற்றி பேசியுள்ளார். அவரை முஸ்லிம்கள் பாராட்டுகின்றார்கள் என்றால், சமூகத்தின் ஏக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்காக இவ்வாறு பேசுவதற்கு யாருமில்லையே என்ற கவலை முஸ்லிம்களுக்குள் வலுத்துள்ளது என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். 

சாணக்கியன் முஸ்லிம்களுக்காக பேசியதற்காக அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. மாறாக அனைத்தையும் மறக்கும் முஸ்லிம்கள் பழைய பொம்மைகளையே அலங்கரிப்பதற்கே வாக்களிப்பார்கள்.

ஒருதரப்பினர், தேர்தல் காலங்களில் தமிழ்ப் பேரினவாத்திற்கும், சிங்கள பேரினவாதத்திற்கும் எதிராக பேசி, வாக்குகளைப் பெற்றதன் பின்னர், சிங்கள பேரினவாதத்துடன் கைகோர்த்துக் கொண்டு, தமிழ்ப் பேரினவாதத்தை தொடர்ந்தும் முஸ்லிம்களின் எதிரியாக காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் பேசாத சமூக விடயத்தைப் பேசுகின்ற போது குறைந்தபட்சம் அவர்களைப் பாராட்டுவதனைக் கூட ஏற்றுக் கொள்ளாத குறுகிய மனநிலையை முஸ்லிம் அரசியலில் காண்கின்றோம். ஜனாஸா வழக்கிலும், அதுபற்றி பாராளுமன்றத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகின்றார்கள். அதனை சந்தர்ப்பவாத அரசியல் என்று சொல்லி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகப் பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்ள முடியாது. 

முஸ்லிம்களின் உரிமை விவகாரத்தில் பேரினவாதம் மறுதலிப்புக்களை செய்து வருகின்றது. ஆயினும்,  கடந்த கால வரலாற்றின் அடிப்படையில், முஸ்லிம்களின் உரிமைகளை ஆட்சியாளர்களே அதிகம் பறித்துள்ளார்கள். என்றாலும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர் அரசியலையே மிகப்பெரும் எதிரியாக முஸ்லிம் சமூகத்திற்கு காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் வெற்றிக்காக தமிழர்களையும், சிங்களவர்களையும் சமூகத்தின் எதிரிகளாகக் காட்டினார்கள். இதனால் நடுநிலையான சிங்களவர்கள், தமிழர்கள் ஆகியோரின் ஆதரவை முஸ்லிம்கள் தற்போது இழந்து நிற்கின்றார்கள். 

இவ்வாறு தமது அரசியல் வெற்றிக்காக தேர்தல் மேடைகளில் பௌத்த சிங்கள பேரினவாத்திற்கு எதிராக கருத்துக்களை விதைத்து நல்ல அறுவடையை பெற்றுக் கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம்களின் எதிரியாக யாரைக் காட்டினார்களோ அவர்களுடன் ஒட்டி உறவாடிக கொண்டிருக்கின்றார்கள்.

சமூகத்தின் துன்பங்களை புரிந்து கொள்ளாதவர்கள் எவ்வாறு சமூகத்தின் பிரதிநிதி என்ற அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதேநேரம் அந்த  உயரிய அடையாளத்தை அவர்களுக்கு வழங்கிய சமூகத்திடமும் பெரும் தவறு உள்ளது. இதனால், சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற செயல்களுக்கு பொறுப்புக் கூற வேணடியவர்களே. 

தேர்தல் வெற்றிக்காக, காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லுவார்கள். வாக்குகளை பெறுவார்கள். பாராளுமன்றத்திற்கு செல்லுவார்கள். பாராளுமன்ற கதிரைகளில் தூங்கிக் காலத்தை கழிப்பார்கள். இதனையே மாறிமாறிச் செய்கின்றார்கள். இடையிடையே ஆட்சியாளர்களின் தேவைக்காக கைகளை உயர்த்துவார்கள். 

இதுதான் முஸ்லிம் பிரதிநிதிகளின்  தொடர் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சி நிரலை இன்னும் அவர்கள் மாற்றவில்லை. அதேநேரம் முஸ்லிம் சமூகமும் தமது போக்கிலிருந்து மாறவில்லை. பழைய காய்ந்த கம்புகளே போதுமென்று திரும்பத் திரும்ப தண்ணீர் ஊற்றுகின்றனர். 

முஸ்லிம் சமூகம் என்றுமில்லாதவாறு கனத்த மனச்சுமையுடன் உள்ளது. ‘அநியாயமாக பாதிக்கப்பட்டவனின் பிராத்தனையை இறைவன் தடையின்றி ஏற்றுக் கொள்கிறான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது. 

இதனை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவார்கள். ஆயினும், அநியாயத்திற்கு மேல் அநியாயம் நடந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அநியாயத்தற்கு காரணமாக இருக்கும் தரப்பினை மென்மேலும்  வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

இந்தச் செயற்பாடானது சமூகத்தின் துன்பத்தில் அதிகாரத் தரப்பினரை மகிழ்வித்துக் கொண்டிருப்பதாகும். இவர்கள் தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகளா என்ற எண்ணத்தினை ஏற்படுத்துவதோடு எப்போது சமூகத்திற்கான பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று சமூக அக்கறையுடையவர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். 

முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட போது முஸ்லிம்களில் பெரும்பகுதினர் அதனை ஏற்றுக் கொண்டனர். இவ்வேளையில் முஸ்லிம்கள் மத்தியில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள். 

ஆயினும், சமூகத்திற்காக அவர்கள் பேசவில்லை. அன்றைய ஆட்சியாளர்களின் பொம்மைகள் போன்றிருந்தார்கள். அபிவிருத்திகளைச் செய்யமாட்டோம். வேலை வாய்ப்புக்களைத் தரமாட்டோம் என்றுதான் அஷ்ரப் தெரிவித்தார். உங்களின் குரலாக இருப்போம் என்றார். அஷ்ரப் முஸ்லிம்களின் குரலாக செயற்பட்டார். அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸையும், அஷ்ரப்பையும் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து அங்கீகரித்தார்கள். 

இன்று அக்கட்சியில் அரசியல் பாடம் கற்றவர்களும் சரி, அதிலிருந்து விலகி புதிய கட்சிகளை அமைத்தவர்களும் சரி, சமூகத்தின் உரிமைகளையும், தன்மானத்தையும் அடகுவைத்து அலங்கரிக்கின்றார்கள். தனிச் சுயநலத்தோடு செயற்படுகின்றார்கள். 

இவர்களை எவ்வாறு முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்று கருத்திற்கொள்ள முடியும். முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டால் அந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. வழங்கப்பட்ட ஆணைக்கு ஏற்ப தமது கடமையையும் நிறைவேற்றும் போதுதான் முஸ்லிம்களின் பிரதிநிதியாக இருக்க முடியும். 

இணக்க அரசியல்
அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டால் தான் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். தமிழர் தரப்பினர் போன்று ஆட்சியாளர்களை எதிர்த்தால் எந்த அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாதென்ற வாதம் முஸ்லிம் அரசியல் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது.

அரசாங்கத்தினை எதிர்ப்பது என்பது வேறு, அரசாங்கத்திடம் எமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பது என்பது வேறு. இது தொடர்பான முழுமையான புரிதல் முஸ்லிம் பிரதிதிநிதிகளுக்கு முதலில் அவசியமாகின்றது. 

முஸ்லிம் கட்சிகள் எந்த ஆட்சியில் பங்காளிகளாக இருக்கவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகப் பெரிய அமைச்சர் பதவிகளிலும், இராஜாங்க அமைச்சர் பதவிகளிலும் இருந்தனர். 

இக்காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எந்த உரிமை பெற்றுக் கொடுக்கப்பட்டது என்றால் வெறுங் கைதான் மீதம். முற்றாக விசேடமாக ஆட்சியின் பங்காளிகளாக இருக்கும் போது தான் முஸ்லிம்களின் மீது அடாவடித்தனங்கள் அரங்கேற்றப்பட்டன. அப்போது அரசாங்கத்தை விட்டு விலகுவதற்கு எவரும் துணியவில்லை. முஸ்லிம்களின் உரிமைகள் தான் பறிக்கப்பட்டன. அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது என்றார்கள். 

ஆனால், அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் நீடித்திருக்கக் கூடியவையாக நடைபெற்றிருக்கவில்லை. மாறாக அபிவிருத்தி திட்டங்களால் புதிய பணக்காரர்கள் தான் உருவாக்கப்பட்டார்கள். அபிவிருத்திகளும் தோல்வியில் நிறைவடைந்தன என்பதற்கு பல உதாரணங்களை முன்வைக்க முடியும். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திகள் வேலைகள் இடை நடுவில் நிற்கின்றன. ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்ட கடலரிப்பினால் பல நூறு ஏக்கர் வயற்காணிளும், தென்னந்தோட்டங்களும் அழிந்துள்ளன. கடலரிப்பை தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. 

பல பாடசாலைகளில் போதிய கட்டிட வசதிகள் கிடையாது. நிந்தவூரில் மர்ஹீம் எம்.எச்.எம்.அஸ்ரப் 1996ஆம் ஆண்டு வரவேற்பு மண்டபமொன்றிக்கு அடிக்கல் வைத்தார். அவரது மரணத்தின் பின்னர் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபம் என்றும் பெயர் சூட்டிக் கொண்டார்கள். அடிக்கல் நட்டு 24 வருடங்கள் கழிந்துள்ள போதிலும் இன்னும் அந்த மண்டபம் பூர்த்தியாக்கப்படவில்லை. இவ்வாறு பலவிடயங்களை கூற முடியும்.

ஆகவே அபிவிருத்தி என்று கூறுபவர்களும் நிலையான அபிவிருத்திகளை செய்ய பூரணமாக செய்ய முடியவில்லை என்றால் ஆட்சியாளர்களுடன் இணக்க அரசியல் செய்வதால் ஏற்பட்ட பயன் தான் என்ன?

ஆட்சியாளர்களுடனான காணப்படும் இணக்க அரசியலைப் பயன்படுத்தி கல்முனை முதல் பல பிரதேசங்களில் காணப்படும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எடுக்கப்பட்டதா? இல்லை, மாறாக, பிரச்சினைகளையே பற்றி பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். இவ்வாறுதான் கடந்த 25 வருடங்கள் சென்றிருக்கின்றன. 

முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. எந்தப் பிரச்சினையும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இன்று தமிழர்களின் பிரச்சினைகளில் சர்வதேசம் கவனம் செலுத்துகின்றது என்றால், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தான் அதற்கு காரணமாகும். 

தமிழ்த் தரப்பினர் எதிர்க்கட்சி அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக தமிழர் பிரதேசங்கள் முழுமையாக ஆட்சியாளர்களினால் புறக்கணிப்படவில்லை. அரசாங்கம் அபிவிருத்திகளைச் செய்துள்ளன. நிலையான அபிவிருத்திகளும் நடைபெற்றுள்ளன. ஆதலால், இணக்க அரசியல் மூலம்தான் அபிவிருத்திகளை அடையலாமென்று என்று வாதிடுவதில் அர்த்தமில்லை. அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளை ஆதரிப்பதுதான் நாகரிகமான அரசியலாகும். அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முட்டுக் கொடுப்பது ஒருபோதும் சமூகம் சார்ந்த அரசியலாகாது. 

முஸ்லிம் வாக்காளர்கள்

மேற்கூறிய விடயங்கள் உட்பட தமது பிரதிநிகள்  பற்றிய குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்கள் இப்போது முன் வைத்திருக்கின்றார்கள். ஆனால் குற்றச்சாட்டுக்களை வைப்பவர்களே அவர்களை தெரிவு செய்திருக்கின்றார்கள். 

கடந்த காலத்தினை எண்ணிப்பார்ப்பதில்லை. முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்ட எந்தவொரு வேளையிலும் சரியாகக் குரல் கொடுக்காதவர்களை திரும்பத்திரும்ப ஆதரிப்பதற்கான காரணம் என்ன?

தமது பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவும், அளிக்கப்படும் வாக்குறுதி கவர்ச்சியாலும்  இதர நன்மைகளுக்காகவும் வாக்களித்து விட்டு தற்போது தெரிவு செய்யப்பட்டவர்கள் மீது மட்டும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் எவ்விதமான பயனுமில்லை 

கடந்த காலங்களில் சமூகத்திற்காக எதனைச் செய்தார்கள் என்று பார்க்காது, வாக்களித்துவிட்டு, இன்று அவர்கள் மீது குறைபட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. தாம் வாக்களிக்கும் முன்னதாக உரிய ஆராய்வு தெளிவுடன் வாக்களிக்காது விட்டு இப்போது கவலைப்படுவதால் பயன் ஏதுமில்லை. ஆகவே முதலில் தவறு செய்தவர்கள் முஸ்லிம் வாக்காளர்கள் தான். முஸ்லிம் வாக்காளர்கள் மாறாதவரையிலட சமூகத்திற்காக குரல் கொடுக்கக் கூடியவர்களை தெரிவு செய்ய முடியாது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் முஸ்லிம்களின் எதிரிகள் என்றே சமூகத்திற்கு அடையாளம் காட்டினார்கள். தேர்தல் முடிந்ததும் அடையாளம் காட்டியவர்களே அவர்களுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனை இந்தத் தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தல்களிலும் செய்துள்ளார்கள். ஆதலால், இவர்களின் செயற்பாடுகளையிட்டு முஸ்லிம் வாக்காளர்கள் சீர்தூக்கிப் பார்க்காதிருக்கின்றமை துரதிஷ்டமே. 

ஆகவே, முஸ்லிம்கள் தமது வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவர்களிடம் சமூகப் பொறுப்பை நிறைவேற்றாமைக்காக கேள்விகளை கேட்க வேண்டும். வாக்களிப்பது மட்டும்தான் நமது கடமை என்று எந்தவொரு முஸ்லிமும் ஒதுங்கி விடக்கூடாது. 

- சஹாப்தீன் -