மை 11 சர்க்கிள்: லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக அரையிறுதிக்குள் நுழைந்து, அரையிறுதி ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணியை தோற்கடித்து காலி கிளாடியேட்டர்ஸ் அணி இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந் நிலையில் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்றிரவு 7.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி ஆரம்ப சுற்றில் விளையாடிய எட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வென்ற பிறகு போனஸ் புள்ளிகள் அட்டவணையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தம்புள்ளை வைக்கிங்ஸ், போட்டிகளில் மிகவும் திட்டமிடப்பட்ட அணியான யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸை எதிர்கொள்ளவுள்ளது.

வீரர்களைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து மிக உயர்ந்த திட்டமிடலுடன் போட்டிகளில் நுழைந்த யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ், தொடக்கத்திலிருந்தே நன்றாகப் போட்டியிட்டு அரையிறுதிக்கு வந்த முதல் அணியாக ஆனது.

தொடர்ந்து முதல் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்றாலும், தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை எதிர்கொண்டது.

தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியில் சிறந்த நட்சத்திரங்கள் பெரும்பாலும் இல்லை. இருந்தபோதும் அவர்கள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இன்றைய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தை நோக்கமாக கொண்டு இரு அணிகளும் நேற்றுமுன்தினம் இரவு (12) மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் பயிற்சி பெற்றன. 

நேற்று (13) ஒரு நாள் விடுமுறை என்றாலும், முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றமையினால் அவர்களுக்கு மைதானத்தில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. 

எவ்வாறாயினும் இரு அணிகளும் தங்களது உடற்தகுதி குறித்து கவனம் செலுத்தியதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்டறையில் உடற்பயிற்சி செய்தன. 

 

யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் லீக்கின் முதல் நான்கு போட்டிகளில் வென்றிருந்தாலும், தம்புள்ளை வைக்கிங்ஸ்ஸுக்கு எதிரான போட்டியைத் தவிர, இறுதி மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. தம்புள்ளைக்கு எதிரான குறித்த போட்டி மழை காரணமாக சமனிலையில் முடிந்தது.

அணியின் பெரும்பாலான பொறுப்பு தொடக்க ஆட்டக்காரர்களான அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் திசரா பெரேரா ஆகியோரிடமே உள்ளது. இரண்டு துடுப்பாட்ட வீரர்களை தவிர, ஷோயிப் மாலிக், டோம் மூர்ஸ் மற்றும் வர்னிந்து ஹசரங்கா ஆகியோரும் துடுப்பாட்டத்தில் வலுச் சேர்க்கக்கூடியவர்கள்.

ஆனால் மூன்று போட்டிகளில் துடுப்பாட்டத்தின் பிரிவில் சில உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது, இதில் காயங்கள் மற்றும் புதிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு காரணமாகவும் அவர்கள் தோல்வியைத் தழுவினர்.

எனினும் லீக் சுற்றில் ஏனைய அணிகளுக்கான பந்துவீச்சுத் துறையில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸின் வலுவான நிலையில் உள்ளமை அணிக்கு சாதகமான அறிகுறியாகும். 

இதற்கிடையில், போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் வர்னிந்து ஹசரங்கா, இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். லீக்கில் எட்டு போட்டிகளில் விளையாடிய ஹசரங்கா, 12.23 சராசரியாக 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளர் எதிரணியின் இன்னிங்ஸின் மையமாக இருக்கிறார்.

அவரைத் தவிர, உஸ்மான் ஷின்வாரி, சுரங்கா லக்மல் ஆகியோரும் எதிரணி அணிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் அளிக்கக்கூடியவர்கள்.

திசரா பெரேரா

இந்த போட்டி குறித்து அணித் தலைவர் திசரா பெரேரா கூறுகையில், 

கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த போதிலும், புதிய வீரர்களின் போட்டியை இறுதி ஓவருக்கு கொண்டு செல்லும் திறன் நாளைய (இன்றைய) போட்டிக்கு சாதகமான அணுகுமுறையை சேர்த்துள்ளது.

முதல் சில ஆட்டங்களைப் பார்த்தால், நாங்கள் எங்கள் சிறந்த அமைப்பை வெளிப்படுத்தினோம். முதல் 4 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு வந்த பிறகுதான் புதியவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக, ஒவ்வொரு போட்டிகளிலும் ஒரு புதிய வீரருக்கு ஒரு வாய்ப்பை வழங்கினோம். 

இருப்பினும் நாங்கள் போட்டியில் தோற்றோம். ஆனால் புதிய வீரர்களால் போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு செல்ல முடிந்தது. அந்த விடயங்களைப் பார்க்கும்போது, நாளைய (இன்றைய) போட்டிக்கான நல்ல மனநிலையில் இருக்கிறோம். 

ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் எங்கள் அணியின் ஆரம்ப வீரர்களுடன் களத்தில் இறங்குவோம் என்றார்.

 

தம்புள்ளை வைக்கிங்ஸ்

முன்னணி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இல்லாத போதிலும் தசூன் சானக்க தலைமையிலான தம்புள்ளை வைக்கிங்ஸ் அணியானது வலிமை மிக்க ஒன்றாக காணப்படுகிறது. அணியின் ஒவ்வொறு வீரர்களின் பொறுப்பான ஆட்டம் காரணமாக பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

8 போட்டிகளில் 273 ஓட்டங்களை எடுத்துள்ள அணித் தலைவர் தசூன் சானக்க, தொடரில் அதிக ஓட்டங்களை எடுத்த மூன்றாவது வீரர் ஆவார். அது மாத்திரமன்றி இக் கட்டான தருணங்களில் பந்து வீச்சிலும் அவரது செயல்திறன் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்லா, சமித் படேல், உபுல் தரங்கா மற்றும் ஏஞ்சலோ பெரேரா ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுச் சேர்க்கின்ற நிலையல், சகலதுறை ஆட்டக்காரனான ரமேஷ் மெண்டிஸும் துடுப்பாட்டத்திற்கு தன்னலான பங்களிப்பினை அளித்து வருகின்றார்.

ரமேஷ் மெண்டிஸின் துடுப்பாட்டம் காலி அணிக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றிக்கு வழிவகுத்தது.

தசூன் சானக்க

இந்த போட்டி குறித்து தசூன் சானக்க கூறுகையில், 

வார்னிந்து ஹசரங்காவின் 24 பந்துகளில் குறைந்தது 24 ஓட்டங்களை எடுக்க முடிந்தால், தனது அணியால் ஏனைய பந்துவீச்சாளர்கள் மூலம் மீதமுள்ள ஓட்டங்களை எடுக்க முடியும்.

ஹசரங்கா நாட்டின் சிறந்த பந்து வீச்சாளர். அவர் எவ்வளவு நன்றாக பந்து வீசுகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவரது ஓவர்களுக்கு விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் குறைந்தது 24 ஓட்டங்களை பெற எமது அணியினர் எதிர்பார்த்துள்ளனர்.

அது முடிந்தால் ஏனைய பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் இன்னும் சில ஓட்டங்களை பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். 

எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான திறமையே ஹசரங்கவின் சிறப்பு. ஒவ்வொரு முறையும் அவர் ஒரு விக்கெட் எடுக்கும்போது, துடுப்பெடுத்தாடும் அணியின் வேகம் பின்னோக்கி செல்கிறது.

நாங்கள் விளையாடிய கடைசி ஆட்டத்தில், நாங்கள் ஐந்து மாற்றங்களுடன் விளையாடினோம். வெவ்வேறு திறமைகளைக் கொண்ட வீரர்களைக் கொண்டிருப்பதுதான் எங்களிடம் உள்ள மிகப்பெரிய பலம் என்று நினைக்கிறேன். 

புதிய வீரர்களுக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பளித்ததால் அந்த நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது. எதிரணியின் ஒவ்வொரு பந்து வீச்சாளருக்கும் சவால் அளிக்கும் வகையிலான சில துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். 

எனவே, ஒரு தலைவராக, இந்த போட்டியில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று அவர் மேலும் கூறினார்.