(ஆர்.ராம்)


1978ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தில் 1987ஆம் ஆண்டு ஜுலை 29இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உள்ளீர்க்கப்பட்டுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு அதிகாரங்களையும் தற்போது வரையில், பிரயோக ரீதியாக பயன்படுத்த முடியாத நிலையில் மாகாண சபைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாண சபைகளில் இந்த விடயத்தினை கையாள முடியாத நிலைமைகளே நீடித்துக்கொண்டிருக்கின்றன.

 

இந்நிலையில் தற்போது பதவியில் உள்ள அரசாங்கமானது புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. அதற்காக அரசியல் கட்சிகள், சிவில் தரப்பினரிடத்திலிருந்து முன்மொழிவுகளையும் கோரியுள்ளது. 

இத்தகைய பின்புலத்தில் புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படும் என்ற கருத்தாடல்கள் பல்வேறு தளங்களில் நிலைபெற்று வருகின்றது. குறிப்பாக, மாகாண சபைகள் ‘வெள்ளை யானைகளாக’ இருப்பதாக தற்போதைய ஆட்சியாளர்கள் பல்வேறு தருணங்களில் பிரதிபலித்துள்ளனர். 

ஜனாதிபதியும், மாகாணசபையின் 68 சதவீதமான நிதியானது மக்களை நேரடியாக சென்றடையவில்லை என்று கருத்தினை கொண்டிருப்பதாக அவருடைய சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடனான கலந்துரையாடலொன்றில் கூறியிருக்கின்றார். 

பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்றிட்ட உடன்படிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் போது காணி அதிகாரங்கள் மாகாண சபையிடத்தில் காணப்படுமாயின் அதன் அனுமதியைப் பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற நிலைப்பாட்டையும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ கொண்டிருக்கின்றார். 

அதேநேரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், தமிழ்த் தரப்பொன்றுடனான கலந்துரையாடலொன்றில், பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்கினால் அநுராதபுர புனித நகருக்குச் சென்று போதி வழிபாடுகளைச் செய்வதாயினும் மாகாணத்தின் அனுமதியை பெறுவதற்கு காத்திருக்க வேண்டி ஏற்படும் என்றும் கூறியிருக்கின்றார். 

மறுபக்கத்தில், 13ஆவது திருத்தச்சட்டமானது, இந்தியா இலங்கையின் இறைமையில் தலையீடு செய்வதற்கு காரணமாக இருக்கின்றது. ஆகவே இலங்கையின் ஆட்புல எல்லை சுயாதீனத்தினை உறுதிப்படுத்துவதற்காக அதனை புதிய அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று உள்ளுராட்சி மாகாண சபையின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார். 

தற்போது அவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பதோடு தேசிய பொலிஸ் கட்டமைப்பும் அவருடைய அமைச்சின் கீழ் காணப்படுகின்றன. இந்நிலையில் அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ஆகவே அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் உள்ள நபர்கள், மாகாணங்களுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். 

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், இந்தியா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.

முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் நிறைவில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பெறும்போது 13ஆவது திருத்தச்சட்டத்தினை அதனுள் உள்ளீர்ப்பது தொடர்பில் இலங்கையின் இறைமையில் இந்தியா தலையிட முடியாத நிலைமை இருக்கின்றது என்ற தொனிப்பட சில பிரதிபலிப்புக்களை உயர்ஸ்தானிகர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.