(ஆர்.ராம்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடுத்த மிக முக்கியமான கேள்வியொன்றுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மௌனமாக இருந்து சமிக்ஞை மூலம் பதிலளித்துள்ளார். 

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் கடந்த 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இராப்பேசன விருந்தொன்று நடைபெற்றது. 

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இருக்கைக்கு அருகில் புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அமர்ந்திருந்தனர். இச்சமயத்தில், அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த தினேஷ் குணவர்த்தனவும் சம்பந்தனை அண்மித்த ஆசனமொன்றில் அமர்ந்திருந்தார். 

இதன்போது, “தினேஷ், அவர்களே புதிய அரசியல் சாசனம் எப்போது கொண்டுவரப்படவுள்ளது” என்று சம்பந்தன் கோரியுள்ளார். சம்பந்தனின் கேள்வி தெளிவில்லாது இருந்தமையால் அருகில் இருந்தவர்கள் அவரது கேள்வியை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடத்தில் பரிமாற்றியுள்ளனர். 

இதன்போது சம்பந்தன் உற்றுநோக்கிய அமைச்சர் தினேஷ் குணர்வத்தன மௌனமாக இருந்ததோடு, அண்ணார்ந்து மேலே பார்த்து தனது சுண்டுவிரலையும் மேல் நோக்கியே காண்பித்திருக்கின்றார். 

இந்த சம்பிக்ஞையை சம்பந்தனும் அவதானித்து விட்டு அமைதியாக இருந்துள்ளதோடு, அருகில் இருந்த சில பிரதிநிதிகள் ‘கடவுளுக்குத்தான் தெரியும் என்று தினேஷ் கூறுகின்றார் போல’ என்று தமக்குள் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.