(ஆர்.ராம்)
தற்போதைய நிலைமையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்துவதாக இருந்தால் பழைய முறையிலேயே அதனை முன்னெடுக்க முடியும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். 

அத்துடன், தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மாணாசபைத் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மேலும் சில வருடங்கள் தேவைப்படும் என்று சுட்டிக்காட்டிய அவர், தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிறைவேற்றுத்துறையான பாராளுமன்றத்திடமே காணப்படுவதாகவும் கூறினார். 

பாராளுமன்றத்தில், பழைய முறைமையில் மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பப்படும் பட்சத்தில் உடன் தேர்தலை நடத்தவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இந்த விடயத்தில் கவனம் எடுக்குமாறு பிரதமரும் ஆலோசனை வழங்கியுள்ளார். 

எனினும், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவது தொடர்பில் நிறைவேற்றுத்துறையான பாராளுமன்றமே தீர்மானமொன்றை எடுக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தீர்மானம் எடுக்கும் அதிகாரம் இல்லை. ஆகவே புதிய முறையிலோ அல்லது பழைய முறையிலோ தேர்தலை நடத்து என்பது தொடர்பில் பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. 

மேலும், புதிய முறையில் தேர்தலை முன்னெடுப்பதாக இருந்தால் சில வருட கால அவகாசம் தேவையாக உள்ளது. ஆகவே பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதே சமகால நிலைமைகளின் அடிப்படையில் சாத்தியமானதாக இருக்கும். 

ஆகவே பாராளுமன்றத்தில், மாகாணசபைளுக்கான தேர்தல் புதிய முறைமையில் நடத்தப்படுவது சொற்பகாலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அதுவரையில் பழைய முறையிலேயே அவற்றுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாகவும் அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. 

அத்தீர்மானம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு எமக்கு அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதில் ஆணைக்குழுவிற்கு எவ்விதமான சிக்கல்களும் இல்லை. உடன் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முன்னகர்த்த தயாராகவே உள்ளோம் என்றார்.