தமிழக அரசியலில் பேசுபொருளாக திரை நட்சத்திரம் ரஜினிகாந்த் மாறியிருக்கிறார். இம்மாத இறுதியில் புதிய அரசியல் கட்சியை அறிவிக்கவிருப்பதாகவும், அடுத்தாண்டு முதல் அரசியல் பணியை தொடங்கவிருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். 

நடிகர் ரஜினிகாந்த் தன் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு, தெளிவான கருத்துகளை தெரிவித்து, எம்.ஜி.ஆரை போலவோ அல்லது கப்டன் விஜயகாந்தை போலவோ வல்லாதிக்கம் செலுத்தவில்லை. அவர் சார்ந்திருக்கும் திரைத்துறையில் அவரால் நல்ல பெயரை சம்பாதிக்க முடியவில்லை. அவருக்கு எதிர்மறையான விடயங்களும் ஏராளமாக உள்ளன. 

இதனால் அவர் சார்ந்த திரைத்துறையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கலவையான விமர்சனங்களே அதிகளவில் வெளிபடுகின்றன. ஏகோபித்த நேர்மையான அரசியல் விமர்சனங்கள் இல்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். இது அவருடைய பலவீனமாகவேக் கருதப்படுகிறது. இதற்கு அவருடைய குடும்ப உறுப்பினர்களும் உடந்தையாக இருக்கிறார்கள்.

இதற்கு அண்மைய சாட்சியாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது கொரோனா காலகட்டத்தின் போது ஏராளமான தனியார் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் தங்களுடைய இடத்தை அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மனமுவந்து வழங்கினர். 

ஆனால் அது போன்றதொரு கோரிக்கை ரஜினிகாந்தின் சொந்த திருமண மண்டபமான ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான சிகிச்சை மையமாக மாற்றியமைக்க அரசாங்கத்திடமிருந்து கோரிக்கை விடுவிக்கப்பட்டது.

உடனடியாக தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ளாமல், மக்கள் நலனே முக்கியம் என்று பரந்த மனப்பான்மையுடன் செயல்படாமல்,‘ பராமரிப்பில் இருக்கிறது’ என்று சுயநலமான ஒரு விடயத்தைக் கூறி அரசாங்கத்தின் கோரிக்கையை புறக்கணித்தனர். இதற்கு ‘மௌன நாயகனான’ ரஜினிகாந்த்தும் உடன்பட்டார்.

ரஜினிகாந்த் தற்போது அரசியல் கட்சியைத் தொடங்கினால், பா.ஜ.க.வின் மறைமுகமான ஆதரவில் தி.மு.க.வின் வெற்றியை தடுப்பதற்காக தொடங்கப்படுகிறது என்ற ஒரு விமர்சனத்தை பாமர வாக்காளர்களும் வைத்துள்ளார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்ற நிலையை ஏற்படுத்துவது ரஜினிக்கு கட்டாயமாகிறது. இது குறித்து ரஜினியிடம் எம்மாதிரியான திட்டமிருக்கிறது என்பதை அக்கட்சியின் நிர்வாகிகளால் துல்லியமாக சொல்ல முடியவில்லை. 

ஆனால், ரஜினியின் கணக்குப்படி தமிழகம் முழுவதும் நேரடியாக மக்களை சந்திக்காமல், இணையம் மூலமாகவே வாக்காளர்களை சந்தித்தால், 8 முதல் 10 சதவீத வாக்குகளை பெற முடியும். இதன் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி ரஜினிக்கு சாதகமாக மாறும். அல்லது ரஜினிக்கு மக்கள் தானாக ஆதரவு அளிக்கக்கூடும். ரஜினி பெறும் வாக்குகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு செல்ல வேண்டிய வாக்குகள். இவை தடுக்கப்படுவதால் தி.மு.க.வின் வெற்றி பாதிக்கப்படும். மேலும் தி.மு.க.வின் வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் கூட குறையலாம் என்றிருக்கின்றது.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால், அ.தி.மு.க. எந்தவகையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்றால், அ.தி.மு.க.வில் நடுநிலையாக இருக்கும் வாக்காளர்கள், ஜெயலலிதாவின் மற்றும் புரட்சித்தலைவரின் உண்மையான விசுவாசிகள், ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருக்கும் தொண்டர்கள், அ.தி.மு.க.வில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெறாதவர்கள் ஆகியோர் ரஜினிக்கு ஆதரவளிக்க கூடும். 

இவர்கள் ஒரு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் அளவிற்கு இல்லை என்றாலும், வெற்றி வீதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும் என்பதை அ.தி.மு.க.வினரே ஒப்புக்கொள்கிறார்கள். அத்துடன் பா.ஜ.க. வேல் யாத்திரை மூலம் தமிழகம் முழுவதும் இந்து வாக்குகளை ஒருங்கிணைத்திருப்பதால், தி.மு.க.விற்கு செல்லவேண்டிய இந்து வாக்குகளின் வீதத்தில் மாற்றம் ஏற்படக்கூடும். 

ரஜினிகாந்த் வலியுறுத்தும் ஆன்மீக அரசியல் குறித்து பாமர வாக்காளர்களுக்கு அதன் அரிச்சுவடி தெரியாது என்றாலும்,‌ ரஜினிகாந்த் மத, இன, சாதி ஆகிய அடையாளங்களைக் கடந்த ஒரு கவர்ச்சியான ஆளுமையுடன் இருப்பதால், அவர் வலியுறுத்தும் ஆன்மீக அரசியலை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்க முன்வருவார்கள். ரஜினி முன்வைக்கும் ஆன்மீக அரசியல் என்பது இந்து ஆன்மீக அரசியல் தான். ஏனெனில் அவர் ஆன்மீகத்தில் தெளிவு பெற ரிஷிகேஷ் போன்ற இந்து ஆன்மீகத் தலங்களுக்கு மட்டுமே சென்றிருக்கிறார் என்பது முக்கிய விடயமாகின்றது.

இதனையறிந்த தி.மு.க.வினர், ரஜினி மத அரசியலைத்தான் வலியுறுத்துகிறாரேத் தவிர ஆன்மீக அரசியலை முன்வைக்கவில்லை என்று விமர்சிக்கிறார்கள். இதற்கு ரஜினி தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் அவரது கட்சி, பெயர், கொள்கையின் போது இந்த சர்ச்சைக்கு முடிவு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

தி.மு.க.வினர் மக்களை உளவியல் ரீதியாக தயார் படுத்திவிட்டோம். என்ற அதீத நம்பிக்கையில் அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் இந்த அணுகுமுறை தேர்தலில் வெற்றி அளிக்காது. இதற்கு உதாரணமாக ஜெயலலிதா மறைவிற்குப்பின் சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலை கூற முடியும். 

இதன் காரணமாகத்தான் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகுதான், அவரது கட்சியின் பெயரையும், கொள்கைகளையும் அறிவித்த பிறகுதான், அவர் குறித்து விமர்சனம் செய்வோம் என தி.மு.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் ஒருமித்த குரலில் தெரிவிக்கிறார்கள். இதன் பின்னணியில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே மறைமுகமான கூட்டணி இருக்கிறதோ?  என்ற ஐயம் ஏற்படுகின்றது. 

இருப்பினும் தமிழக அரசியலில் ரஜினிகாந்தின் வருகையால் 1996, 2001 க்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் பாரதீய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இடம் பெறக்கூடும் . மேலும் பா.ஜ.க. தங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொள்ள தி.மு.க.வில் அதிருப்தியுடன் இருக்கும் மு.க.அழகிரியை சந்தித்து, தனிக்கட்சி தொடங்கும் படி தொடர்ந்து தூண்டி விடுகிறது. அவர் இந்த தருணத்தை பயன்படுத்தி, தி.மு.க.வில் அதிகாரத்துடன் மீண்டும் இணைந்து விட வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். 

இதனை உணர்ந்த பா.ஜ.க., வேறு வழி இல்லாமல் ரஜினியை தூண்டி, வற்புறுத்தி அரசியல் கட்சியை தொடங்க வைத்திருக்கிறது. அத்துடன் மட்டும் நில்லாமல் தன் கட்சியை சார்ந்த ‘பசை’யுள்ள நிர்வாகி ஒருவரையும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திணித்திருக்கிறது. ரஜினியும் வேறு வழி இல்லாமல் மத்திய அரசு தரும் அழுத்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். 

அவர் விரும்பும் அரசியல் மாற்றம் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டபேரவைத் தேர்தலில் நிகழுமா? அவர் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்பதை தொடர்ச்சியான அவருடைய அரசியல் நடவடிக்கையின் மூலமே தெரியவரும். 

இருப்பினும் அவர் அரசியல் கட்சியைத் தொடங்கி ஆட்சி அதிகாரத்தை மட்டும் கைப்பற்றுவதை மட்டுமே நோக்கி பயணிப்பதால், அதில் மக்கள் நலனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது அவரது கட்சியின் பெயர், சின்னம், கொள்கை ஆகியவை தான் தீர்மானிக்கும். 

இந்நிலையை ‘துரித உணவு’ போல், ஆட்சி அதிகாரத்திற்காக தொடங்கவிருக்கும் ‘துரித அரசியல் கட்சி’யின் சுவை மக்களுக்கு பிடிக்குமா? ரஜினியின் அரசியல் கணக்கு எடுபடுமா? இல்லையா? என்பது புத்தாண்டில் தெரியவரும். அதுவரை வாக்காளர்கள் ரஜினிகாந்த் ஆளுமையுள்ள தலைவராக இருப்பாரா? என்பது குறித்து நிதானமாக சிந்தித்துக் கொண்டேயிருப்பார்கள். 

-குடந்தையான்-