(எம்.மனோசித்ரா)
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பு காரியாலயமாகியுள்ளது. முழு உலகமும் நகைக்கும் வகையில் ஏன் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற முற்போக்கான நடவடிக்கைககளில் முக்கியமானது சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அரசியலமைப்பு பேரவை மூலம் சுயாதீனமாவர்கள் நியமிக்கப்பட்டமையாகும். இதன் மூலம் நாம் ஆட்சியில் இருந்தாலும் எமது விருப்பத்திற்கு செயற்பாட முடியாது என்பதை இந்த ஆணைக்குழுக்கள் தெரியப்படுத்தியுள்ளன.

இதன் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்போது ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள அரசியலமைப்பு பேரவையும் பெயரளவிலேயே நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு பெயரையும் இவர்களால் நிராகரிக்க முடியாது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 1997 இல் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இவ்வாணைகுழு தொடர்பான சட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பான அறிவுள்ளவர்கள் மாத்திரமே அதன் தலைவராகவும் உறுப்பினராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர்கள் அவ்வாறான தகைமையுடைவர்கள் அல்ல.

தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜகத் பாலசூரிய என்பவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட அமைப்பாளராவார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவினுடைய ஆட்சி காலத்தில் அமைச்சராகவும், ஆளுனராகவும் இவர் செயற்பட்டுள்ளார். இவரது மகன் தற்போதை அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகவுள்ள அதே வேளை, மனைவி ஆளுனராகக் காணப்படுகிறார். இவ்வாறான அரசியல் பின்னணியைக் கொண்டுள்ள இவரால் நாட்டில் மிக முக்கியத்துவமுடைய  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக எவ்வாறு சுயாதீனமாக செயற்பட முடியும்? இது கேலிக்குரியதும் வெட்கப்பட வேண்டியதுமான விடயமாகும்.

அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்கள் மனித உரிமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் இவர் எவ்வாறு நீதியான விசாரணையை முன்னெடுப்பார். இதற்கு யார் பொறுப்பு கூறுவது? ஜனாதிபதி பொறுப்பு கூறுவாரா? 

ஆணைக்குழுக்களின் நியமனங்களில் அரசாங்கத்திற்குள்ளேயே பாரிய எதிர்ப்பு வெளியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் கூட இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படவில்லை. இறுதியில் எமக்கும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.