(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபை தேர்தலை  2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பழைய முறைமையிலாவது நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த தேர்தலிலும் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் வெற்றி பெறும் என சுய கைத்தொழில் விருத்தி மனைபொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரபல அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் , ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

2021 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டம் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த முடியாமல் போனதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும். மாகாணசபை தேர்தலை 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பழைய முறையிலாவது நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான  பேச்சுவார்த்தை தேர்தல் ஆணைக்குழுவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் அமோக வெற்றி பெறும். பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் முழுமையான ஆட்சியதிகாரத்தை வழங்குவார்கள். தேசிய  பொருளாதாரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும். அதற்கான நடவடிக்கை இனி துரிதமாக செயற்படுத்தப்படும் என்றார்.