தளபதி விஜயின் புதிய படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் தயாராகவிருக்கும் தளபதி65 படத்தினை இயக்கவிருப்பது யார் என்பது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் வெளியாகின. 

பொதுவாக தளபதி விஜய் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, அப்படத்தின் படபிடிப்பு நிறைவடையும் தருவாயில் அடுத்த படத்திற்கான இயக்குநர் யார் என்பது தெரியவரும். 

அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கும் விஜய், அப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையிலும் அடுத்தப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. 

கொரோனா காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மாஸ்டர் படத்தின் வெளியீடு, தற்போது அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தளபதி 65 படத்தினைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

‘தளபதி 65’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். 

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதற்கு அனிரூத் இசையமைக்கிறார். 

இதற்காக அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்று தயாரிக்கப்பட்டு அது இணையத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.