(நா.தனுஜா)
பல்வேறுபட்ட அரசியல் காரணங்கள் மற்றும் இப்போதுள்ள அக, புற சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லும் நோக்கிலேயே 2021 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
வரவு - செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தமைக்கான காரணம் குறித்து வினவிய போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
ஏற்கனவே வரவு - செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை மேற்கொண்டிருந்தோம். 2009 ஆம் ஆண்டில் எமது மக்களின் இனப்படுகொலையின் பின்னர் மஹிந்த ராஜீவ அரசாங்கம் ஆட்சியிலிருந்தபோது 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு வரவு - செலவுத்திட்டங்களுக்கு நாம் ஆதரவாகவே வாக்களித்திருந்தோம்.
எமது மக்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி, அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கான எமது முனைப்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்துவதே அதன் நோக்கமாகக் காணப்பட்டது. அதன்பின்னர் 3 ஆண்டுகள் நாங்கள் வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராகவே வாக்களித்திருந்தோம்.
எனினும் மீண்டும் 2015 ஆம் ஆண்டின் பின்னர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டாட்சியின் போது நாங்கள் எதிர்த்தரப்பில் இருந்தாலும் எமது மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதையும் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதையும் எதிர்பார்த்து அந்த அரசாங்கத்தின் வரவு - செலவுத்திட்டங்களுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்தோம். அதன் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பைப் பொறுத்தவரையில் நாம் கட்சி ரீதியாகக் கூடி ஆராய்ந்தோம்.
இதன்போது பல்வேறு அரசியல் காரணிகள் மற்றும் தற்போதைய அக, புற சூழ்நிலைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லும் வகையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதனையே நாம் நடைமுறைப்படுத்தினோம்.
எவ்வாறெனினும் வரவு - செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்து, நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம் என்ற கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் எமது தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச அமைப்புக்கள் மற்றும் வெளிநாடுகளுடன் பேசினாலும் இறுதியில் இந்நாட்டு அரசாங்கத்துடன் பேசவேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது.
ஆகவேதான் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியைக்கூறும் விதமாக வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தோம். இந்தச் செய்தியை அரசாங்கம் எவ்வாறு நோக்குகிறது, அதற்கு அரசாங்கத்தின் பிரதிபலிப்பு என்ன என்பதைப்பொறுத்து எமது அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM