நிவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகாஸுக்கு வெளியே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் லொறியொன்று பல மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தியதில் ஐந்து சாரதிகள் உயிரழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை காலை 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 20 மோட்டார் சைக்கிள்கள் குறிந்த நெடுஞ்சாலையில் சவாரி செய்து கொண்டிருந்தபோது ஒரு பெட்டி லொறி பின்னால் சென்று மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோதலுக்குப் பின்னர் பல மணி நேரம் விபத்தினை ஏற்படுத்திய பெட்டி லொறி சம்பவ இடத்திலேயே இருந்ததுடன் விபத்துக்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த நான்கு மோட்டார் சைக்கிள் சாரதிகளும், சவாரி செய்தவர்களில் ஒருவரும் ஆபத்தான நிலையில் ஹெலிகொப்டர் மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.