(எம்.மனோசித்ரா)
தொற்றாளர்களை துரிதமாக இனங்கண்டு நீண்ட நாட்களாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுவிப்பதை இலக்காகக் கொண்டு ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு தனியார் துறையினருக்கும் அனுமதியளிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பி.சி.ஆர். , அன்டிஜன் பரிசோதனைகளை அதிகரித்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்களை விடுவித்தல் என்பன தொடர்பில் தெளிவுபடுத்துகையில் இதனைத் தெரிவித்த இராணுவத்தளபதி மேலும் கூறுகையில்,
நீண்ட நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 14 தொடர்மாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களுக்கு அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியேறுவதற்கும் அனுமதியளிக்கப்படவில்லை. இது துரதிஸ்டவசமானது என்ற போதிலும் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய செயற்பாடாகும்.
எனவே தான் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படக் கூடியவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தொடர்மாடி குடியிருப்புக்கனை விடுவிப்பதற்கான விசேட செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மட்டக்குளியில் ரந்திய உயண, முகத்துவாரத்தில் மிஹிஜய செவன ஆகிய குடியிருப்புக்கள் ஒவ்வொன்றிலும் தலா 1000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் அங்கு நாம் எதிர்பார்த்தளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை. ரந்திய உயண குடியிருப்பில் 1025 பரிசோதனைகளில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்மாடி குடியிருப்புக்களில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை அல்லது ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் போது 23 குடும்பங்களில் ஒவ்வொருவர் தொற்றுடன் இனங்காணப்பட்டனர்.
இதே வேளை தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட குடும்பங்களிலுள்ள ஏனைய உறுப்பினர்களுக்கும் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன் போதே 40 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த வழிமுறையைப் பின்பற்றி தொடர்மாடி குடியிருப்புக்களில் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுத்து அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனைப் போன்று கம்பஹா மாவட்டத்தில் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று கொழும்பிலும் அபாயமற்ற பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொழும்பில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் சனத்தொகை அதிகமாகும். எனவே கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே அவற்றை முடக்கியுள்ளோம். மாறாக அங்குள்ள மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்கல்ல.
கொழும்பு மாநகரசபையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு இராணுவமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களின் அளவை அதிகரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமையவே நாளொன்றுக்கு 10 000 இற்கும் அதிகமான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் தொற்றாளர்களை விரைவில் இனங்கண்டு சமூகத்தை முடக்கத்திலிருந்து விடுவிக்க எதிர்பார்த்துள்ளோம்.
தொற்றாளர்களை துரிதமாக இனங்காண்பதை இலக்காகக் கொண்டு தனியார் துறையினருக்கு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு அனுமதியளிப்பது குறித்து சுகாதார அமைச்சர் தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM