(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரசியல் நோக்கங்களை மறந்து அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் , அரசியல் இலாபத்தை நோக்காக கொண்டு எதிர்தரப்பினர் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நீதிமன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை. நீதித்துறை கடந்த காலத்தை காட்டிலும் சுயாதீனமான முறையில் செயற்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறை  தற்போதைய அரசாங்கம் தொடராது. மக்களாணைக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினாலேயே நாட்டு மக்கள் ஜனாதிபதி தலைமையில் பலமான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது.  ஆகவே அரசாங்கம் ஒருபோதும் மக்களாணைக்கு முரணாக செயற்படாது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரசியல்வாதிகள் அனைவரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் விவகாரத்திலும் எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். பிற நாடுகளில் இவ்வாறான தன்மை கிடையாது என்றார்.