(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட  சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதியானதாக இல்லை என்பது சபையில் பேசியவர்களின் கருத்தில் தெரிகின்றது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல. அதேபோல் மனித உரிமை வழக்குகள் மாகாண மேல் நீதிமன்றங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எனினும் இந்த நாட்டின் நீதிமன்ற சுயாதீனம் குறித்த முரண்பாடுகள் எமது நாட்டின் மீதான தவறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. குறிப்பாக சிறும்பான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. தசாப்த காலமாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியாத நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ளது. அரசியல் தலையீடுகள் நீதிமன்றங்கள் மீது பிரயோகிக்கப்படுவதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகின்றது என கருதுகிறேன். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்பட்டும் வருகின்றது. இது குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரையில் நீட்டிக்கப்படுகின்றது.

அண்மைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டாலும் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எழுகின்ற நேரங்களில் எல்லாம் நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அவரால் அதனை மாத்திரமே செய்ய முடியும். முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் குறித்த பிரச்சினை எழுந்த நேரமும் அதனையே அவர் செய்தார். பெரும்பான்மையின் நிலைப்பாட்டுக்கு அமைய நியாயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அதேபோல் வேறு சில காரணிகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. உதாரணமாக 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பவர்கள் அரச பாதுகாப்பிலேயே உயிரிழக்கின்றனர் என்றால் அது பாரிய பிரச்சினையாகும். அண்மையில் மஹர சிறையிலும் கைதிகள் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ சிறையில் 27 பேர் கொல்லப்பட்டனர் . 2012 வவுனியா சிறையில் நிமலரூபன், டில்ருக்ஷன் கொல்லப்பட்டனர். இவர்கள் அடித்து கொல்லப்பட்டனர். கை கால்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதற்கான சாட்சியங்கள் உள்ளது.

இவ்வாறு பட்டியலை நீட்டித்துக்கொண்டே செல்ல முடியும். அரசாங்கம் ஜனநாயகத்தை உயரியதாக கருதுவதாக கூறுகின்றது. சிறந்த நீதிமன்ற கட்டமைப்பு உள்ளதாக கூறுகின்றது. அவ்வறு இருந்தும் எவ்வாறு சிறைக்குள் கொல்லப்படும் நபர்கள் குறித்த உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்காது இருக்க முடியும். நீதிமன்ற சுயாதீனமே இல்லாத ஒரு நாட்டிற்கு எதற்கு நீதி அமைச்சர் என்ற கேள்வியே எழுகின்றது. குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை என்பது மிக மோசமான நீதி கட்டமைப்பாகும். 

திருகோணமலை ஐந்து மாணவர் கொலை விவகாரத்தில் நீதி எங்கே? கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல் விடயத்தில் என்னவானது? சிவநேசன் விடயத்தில் என்னவானது? ரவிராஜ் விடயத்தில் நீதி எங்கே? பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விசாரணைகள் என்னவானது? லசந்த விக்கிரமதுங்க, கீத் நோயர், பிரகீத் எக்னளிகொட, 34 தமிழ் ஊடகவியலாளர்கள் காணமால் போனமை, கொல்லப்பட்டமை குறித்தெல்லாம் ஏன் நீதி நிலைநாட்டப்படவில்லை. ஒரு சிலரது கொலைகளில் பாதுகாப்பு படையினர் தொடர்புபட்டுள்ளனர். இந்த விடயங்களில் குறைந்த பட்சம் விசாரணைக்குக் கூட எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஜனநாயக, சட்ட வல்லமை கொண்ட நாடென்றால் ஏன் இவ்வாறு நடக்கின்றது. எனவே நீதிமன்றம் மீது நம்பிக்கை எமக்கு இல்லை என நேரடியாக எம்மால் கூட முடியும். இதற்கான எம்மை நீங்கள் திட்ட முடியாது. இந்த நாட்டில் மோசமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது. சர்வதேச குற்றங்கள் பல நடந்துள்ளது. அதனால் தான் சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம். சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கோருகின்றோம். அதனை நீங்கள் வேண்டாம் என கூற முடியாது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் வெளியாகிவிட்டது. நாம் புதிதாக கூறத் தேவையில்லை, நீங்களே அதனை கூறிக்கொண்டுள்ளீர்கள் என்றார்.