(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்டத் தொழிலாளர்கள் மீது தாக்கல்செய்யப்பட்டுள்ள பெருந்தொகையான தொழில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

புதிய சட்டங்களை உருவாக்கி அவற்றுக்கு தீர்வை வழங்க தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு -செலவு திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுக;fளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டுக்கு அதிகமான வருமானத்தை பெற்றுக்கொடுப்பவர்களாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். 

பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் நடத்தைகள் தொடர்பில் தொழில் அமைச்சருக்கு நன்றாகத் தெரியும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அனைத்து வசதிகளும் இருந்தன. ஆனால், தற்போது அவ்வாறு இல்லை.

மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பெருந்தொகையான தொழில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு தீர்வை வழங்க வேண்டும். பெருந்தோட்டங்களை உருவாக்கிய தொழிலாளர்களையும் அந்தத் தொழிலையும் கௌரவிக்கும் வகையிலும் தொழில் அமைச்சர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்கள் பணிப்புரியும் தளத்தில் குளவிக் கொட்டு, பாம்புக் கடி மற்றும் சிறுத்தை தாக்கமென பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க வேண்டும். 

குளவிக்கொட்டில் இருந்து பாதுகாக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சில வேலைத்திட்டங்களை தயாரித்துள்ளார். 

பாதுகாப்பு உடைகள் வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆகவே, அதற்கு தொழில் அமைச்சு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றார்.