(ஆர்.ராம்)

போர்க்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இலங்கை தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட 18 பேருக்கு கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு கனடிய அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

“த அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (ACCP) என்ற அமைப்பு கனடிய வெளிவிவகார அமைச்சர் பிரன்சுவா பிலிப் சம்பேனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியானகே மேஜர் ஜெனரல் மஹிந்தா ஹதுருசிங்க, மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராய்ச்சி, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்ரூபவ் மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, கேர்ணல் ஜி.வி. ரவிப்ரியா, பிரிகேடியர் பிரசன்னா சில்வா, பிரிகேடியர் நந்தன உடவத்த, பிரிகேடியர் ஷாகி கலேஜ், அட்மிரல் வசந்த குமார ஜெயதேவா கரன்னகொட, அட்மிரல் திசாரா எஸ்.ஜி.சமரசிங்க, அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ்.திசானநாயக்க, சி.என்.வகீஷ்டா ஆகியோரின் பெயர்களும் காணப்படுகின்றது.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயிட்ஹ{சைனின் அறிக்கை மற்றும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரோன் ஆகியோரது இலங்கை அரசு மீதான சர்வதேச சுதந்திர விசாரணைக்கான முன்முயற்சி வலியுறுத்தலைத் தொடர்ந்து கனடிய அரசும் இவர்கள் மேல் முதற்கட்டமாக தடைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சூழ உயர்பதவிகளில் இந்த படை அதிகாரிகள் இருக்கின்றனர். இலங்கை அரசாங்கம் 30.1 தீர்மானத்திலிருந்து பின்வாங்கியுள்ளதோடு சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்காத போக்கில் செயற்படுகின்றது. இவ்வாறான நிலையில் குற்றவாளிகளின் சுதந்திரமான நடமாட்டத்தை தவிர்க்கும் வகையிலும் சொத்து முடக்கம், நிதி மற்றும் பயணத்தடை ஆகியவற்றையும் விதிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

கனடாவில் 2017இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்டங்களின் அடிப்படையிலும், மனிதத்திற்கு எதிரான குற்ற மற்றும் போர் குற்ற சட்டத்திற்கு அமைவான குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரமும் பயணங்களுக்கான மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்தின் போர் குற்றவாளிகளை ரோம் சட்டத்தின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, கனேடிய அரசு தலையிட்டு கடந்த பதினொரு ஆண்டுகளாக தமது உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கனடா மனித உரிமைகளை மதிக்கும், உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் நாடு என்ற வகையில், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப்பதற்காக கனேடிய அரசு இந்த விடயத்தில் தலையீடுகளைச் செய்து உலகத்திற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.