(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் பரவலை எதிர்கொள்ளல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய நிதி மற்றும் ஏனைய உதவிகள் குறித்து உயர் வெளிப்படைத்தன்மை பேணப்படுவது அவசியம் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொவிட் - 19 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும்போது, பதிவுசெய்யப்பட்ட அளவுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலான விநியோகத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தை நினைவுகூரும் அதேவேளை, மறுபுறத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தமது அன்றாட வாழ்க்கையில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கின்றனர். இம்முறை 'நேர்மையாக மீள்வோம்' என்பது ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தின் தொனிப்பொருளாக உள்ளது. அத்தகைய மீட்சியை உறுதிசெய்வதற்காக கொவிட் - 19 வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய ஊழலைத் தடுப்பதில் விசேடமாகக் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

குறிப்பாக சமூகத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பவர்களுக்கான நிவாரணம் மற்றும் அத்தியாவசிய மருத்துவசேவைகளை வழங்குவதில் ஊழலின் பாரதூரமான விளைவுகளைக் கருத்திற்கொள்ளும்போது இந்தத் தொனிப்பொருள் எமது நாட்டின் நிலைவரத்துடன் நன்கு பொருந்துகிறது.

கொவிட் - 19 வைரஸ் பரவலை எதிர்கொள்ளல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடைய நிதி மற்றும் ஏனைய உதவிகள் குறித்து உயர் வெளிப்படைத்தன்மை பேணப்படுவது அவசியம் என்று வலியுறுத்தி இவ்வருட ஆரம்பத்தில் பிரதமருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தோம். அதன்படி தமக்குக் கிடைத்த உதவிகளை வெளிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைள் பற்றி பிரதமர் அலுவலகமும் நிதியமைச்சும் தெளிவுபடுத்தியிருந்தன.

எனினும் அவசரகால கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்துவது அவசியமாகும். கொவிட் - 19 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யும்போது, பதிவுசெய்யப்பட்ட அளவுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு முன்னுரிமையளிக்கும் வகையிலான விநியோகத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும். நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் இவ்விடயங்களை உடனடியாக செயற்படுத்துவது அவசியமானதாகும்.

ஊழலால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதால், ஊழலற்ற ஒரு தேசத்திற்கான தமது எதிர்பார்ப்பை பொதுமக்கள் காணொளி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.