பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் ஆகியோரை இந்த வாரம் சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

குறிப்பாக கடந்த சில வாரங்களாக தற்கொலைக் குண்டுதாரிகள் உட்பட புலிகளின் பயங்கரவாத செயல்களை மகிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு சாராத செயற்பாட்டாளர்களின் அதிகரித்து வரும் நடவடிக்கைகளின் பின்னணியில், நாடுகளின் பாதுகாப்பு குறித்த பரஸ்பர அக்கறை குறித்து அமைச்சர் கலந்துரையாடினார். 

புதிய தலைமுறை இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தீவிரமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் வகையில், பயங்கரவாதப் பிரச்சார நடவடிக்கைகளில் சிறுவர்களைப் பயன்படுத்துதல் குறித்து தூதுவர்களால் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.

பயங்கரவாத நடவடிக்கைகள் சார்ந்த சகிப்புத்தன்மையோ அல்லது பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தும் வகையிலான நோக்கங்களோ தமது நாடுகளில் இல்லை எனவும், அரசு சாரா நிறுவனங்களின் அண்மைய செயல்கள் எந்த வகையிலும் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டின் மாற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் உயர் ஸ்தானிகர்கள் தமது அரசாங்கங்களின் வலுவான நிலைப்பாட்டைத் தெரிவித்தனர்.

ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகிய இரண்டு நாடுகளிலும் பயங்கரவாதக் குழுவாக தடைசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் எழுச்சி பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பு உட்பட பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்களுக்காக அமைச்சர் குணவர்தன தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளாக இருப்பதால், இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகள் ஆழமாக வேரூன்றியவையும், உறுதியானவையும் மற்றும் பரந்த அளவிலானவையுமாகும் என சுட்டிக்காட்டிய அவர், தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்புக்கான தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். 

கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான செய்திகளை வரவேற்ற அதே வேளையில், குடிமக்களை ஆதரிப்பதற்கான நாடுகளின் பகிரப்பட்ட முயற்சிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியைத் தொடர்தல் மற்றும் குடிமக்களின் நல்வாழ்வை ஆதரிப்பதற்கான மீள் அளவீடு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலின் போது அமைச்சர் குணவர்தனவுடன் இணைந்திருந்தனர்.