வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் நிலை தடுமாறி ஓட்டிச் சென்றதால் அவரை முன்னோக்கிச் சென்ற போது கார் விபத்துக்குள்ளாகியதாக இறப்பு விசாரணையில் சாரதி தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி நுணாவில் பகுதியில் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவரும் அவரது சகோதரியின் பிள்ளை ஒருவருமான இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும் மூவர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த பெண்ணின் கணவரான சாரதி காயங்களின்றித் தப்பித்தார்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

நுணாவில் சந்திக்கு அண்மையில் உள்ள டயர் கடைக்கு முன்பாக டயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 கண்டி வீதியில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் 5 படுகாயமடைந்தனர்.

அவர்கள் ஐந்து பேரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் மற்றும் 6 வயதுச் சிறுவன் உயிரிழந்தனர்.

“யாழ்ப்பாணத்தை  சேர்ந்த திருமதி ஆன் டேரோளினி (வயது -30), அவரது சகோதரியின் மகன் யோகதாஸ் மகிழன் (வயது -6) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஆன் மக்கிலியோட் (வயது – 6) தலையில் படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றார்.

லேபோனியா என்ற பெண்ணும் கரோலின் (வயது-35) என்ற பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

உயிரிழந்த இருவர் தொடர்பில் இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.

“நான் திருமணம் முடித்து 10 மாதங்கள். எனது மனைவியின் சகோதரருக்கு இன்று திருமண ஆண்டு விழா. அதனால் அவரது வீட்டில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்க சரசாலைக்கு காரில் சென்றோம்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, வீதியால் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் நிலை தடுமாறி அதனை செலுத்திச் சென்றார். அவரை முந்துவதற்கு முயன்ற போதே கார் வேகக் கட்டுப்பாட்டையிழந்து எரிபொருள் தாங்கியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. 

அப்போது கார் சக்கரங்களில் ஒன்று காற்றில்லாமல் போயிருந்தது” என்று சாரதியான உயிரிழந்த பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கினார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கும் என்று திடீர் இறப்பு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.