( எம்.எப்.எம்.பஸீர்)

உறவினர்கள், பொறுப்பாளர்கள் இதுவரை கையேற்காத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின்  சடலங்களை உடனடியாக  தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, நேற்று பிற்பகல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழந்த பலரின் சடலங்களை பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில் அவை, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் கீழ் உள்ள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பொறுப்பேற்கப்படாத 19 சடலங்கள் இன்று மாலையாகும் போதும் அந்த பிரேத அறைகளில் இருந்தமையை சுகாதார் தரப்பினர் உறுதி செய்தனர்.

 இந் நிலையில், இவ்வாறு கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்கள் தொடர்ச்சியாக பிரேத அறைகளில் வைத்திருப்பதானது, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கடும் அச்சுறுத்தலானது என சுட்டிக்காட்டி, அது தொடர்பில் தமக்கு பொருத்தமான அலோசனை ஒன்றினைப் பெற்றுத் தருமாறு, சுகாதார சேவைகள் பனிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளார்.

 இந் நிலையிலேயே அது தொடர்பில் ஆராய்ந்துள்ள சட்ட மா அதிபர், இன்று பிற்பகல்,  குறித்த சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனைகளை வழங்கியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன உறுதி செய்தார்.

இதனிடையே, உறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க  முன்வராத, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின்  சடலங்களையும்,  இறுதி சடங்கு குறித்த அடிப்படை செலவை ஏற்க முடியாதவர்கள் தொடர்பிலான சடலங்களையும்  அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொன்டு வரப்பட்டுள்ள நிலையில்,  உடனடியாக சுகாதார மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டு, அரச செலவில் சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 இது தொடர்பில் ஏற்படும் செலவீனங்களை,  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம்  மேஜர் ஜெனரால் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்.