இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு இறுதியான தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு இந்திய அமைச்சர் இராதா மோகன் சிங் உத்தியோகபூர்வ கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

இக்கடிதத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தியா வருமாறும் அமைச்சர் அமரவீரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தகவல் தருகையில் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தீர்வின்றி தொடர்ந்து கொண்டே போவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான இறுதித் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக இந்திய விவசாயத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் இராதா மோகன் சிங் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு உத்தியோகபூர்வ கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அக்கடிதத்தில் பேச்சுவார்த்தைகள் இம் மாதம் முதல் வாரத்தில் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வடமாகாண மீனவச் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரையும் கலந்து கொள்ளுமாறும் இந்திய அமைச்சுக்களின் கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இப்பேச்சுவார்த்தைகளில் இந்தப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ் அழைப்பை அமைச்சர் அமரவீர ஏற்றுக் கொண்ட போதும் ஆகஸ்ட் அதாவது இம் மாதம் முதல் வாரத்தில் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது என்றும் ஏற்கனவே சில உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கின்றது எனவே இப் பேச்சுவார்த்தைகளில் இம் மாத இறுதியில கலந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்ததோடு அமைச்சர் என்ற ரீதியில் இவ்விடயத்தில் தனித்து முடிவெடுக்க முடியாது என்றும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அடிப்படையிலேயே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படுமென்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் உயரதிகாரி தெரிவித்தார்.