2020 ஆம் ஆண்டு டுவிட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் ட்ரம்ப் முதிலடம் பிடித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து மக்கள் அதிகம் ட்வீட் செய்துள்ளனர். அவரைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அதேபோன்று மூன்றாவதாக அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ப்ளாய்டின் கொலை குறித்து அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

டுவிட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.

அமெரிக்க துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இந்தப் பட்டியலில் உள்ள ஒரே பெண் ஆவார். இவர் 10 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ரேப்பர் கன்யே வெஸ்ட் மற்றும் மறைந்த கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் ஆகியோரும் அடங்குவர்.

தற்போதைய சூழ்நிலையில் அரசியல் மாற்றத்திற்கான ஒரு முக்கிய தளமாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உள்ளன என்பதும் இதன் மூலமாகத் தெரிகிறது.

அதேபோன்று இந்த ஆண்டு மக்கள் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான ஹேஷ்டெக்காக #COVID19 இருந்துள்ளது. இந்த ஹேஷ்டேக் 40 கோடி முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டும்மல்லாமல், உலகின் பெரும்பகுதி மக்கள் வீட்டிலேயே அதிகமாக இருந்ததால் மற்றும் இருப்பதால் #StayHome என்ற ஹேஷ்டெக் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கிடையில், ஜோர்ஜ் ப்ளாய்ட் கொலை  காரணமாக இந்த ஆண்டின் அதிகம் டுவீட் செய்யப்பட்ட இரண்டாவது ஹேஷ்டேக் #BlackLivesMatter பிளாக் லைவ்ஸ்மேட்டர் ஆகும்,

இது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பொலிஸ் அதிகாரியின் செயல்பாட்டுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியது.