கேகாலையில் ஆயூர்வேத வைத்தியரால் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தாக கண்டுபிடித்ததாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்ள நேற்று (8ஆம் திகதி) ஒரே இடத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கொரொனாவுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியது என கூறப்படும் இந்த மருந்து கேகாலை ஹெட்டிமுல்லையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்ற ஆயூர்வேத வைத்தியரால் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

குறித்த மருந்தை பெற பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடியதையடுத்து ஐயாயிரம் பேர் இந்த மருந்தை பெற்றுச்சென்றுள்ளனர்.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தாக இது அமைவதாகவும் 5000 குடும்பங்களுக்கு தாம் அம்மருந்தை இலவசமாக வழங்குவதாக அறிவித்ததையடுத்தே அவரது வீட்டை பல்லாயிரக்கணக்கோர் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த மருந்தை பெற்றுக்கொள்ள பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் பெற்றுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியமையால் குறித்த மருந்தை விநியோகிக்க கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தடை விதித்துள்ளார்.

 அத்தோடு மருந்து வழங்கும் நிகழ்வு தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரிடம் தகவல் கோரப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த ஆயர்வேத மருத்துவர் உருவாக்கிய பாணி மருந்து ஒரு உணவு நிரப்பியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் உள்ள உள்நாட்டு மருத்துவத்திற்கான தேசிய குழு இந்த மருந்தை உணவு நிரப்பியாக அடையாளம் கண்டுள்ளது என்று கூறியள்ளார்.

அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் தேன் மற்றும் சாதிக்காய் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களிலிருந்து இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்துகள் அமைச்சின் கீழ் உள்ள ஒப்புதல் குழுவால் அங்கீகரிகப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாதுபிட்டிவல வைத்தியசாலையில் இரண்டு மருத்துவ பரிசோதனைகளில் இந்த மருந்து பயன்படுத்தப்பட்டதாகவும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 100 சதவீதம் பேர் குணமானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்மருந்து தொடர்பில் மூத்த முதுகலை ஆயர்வேத மருத்துவர்கள் சங்கம் (Seior Post Graduate Ayurvedic Doctors Association) ஆனது, தம்மிக்க பண்டாரவால் உருவாக்கப்பட்ட கோவிட் 19 க்கான சிகிச்சை எனும் மருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டது என்றும், மருந்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால் ஆயர்வேத மருத்துவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

மருந்தை தயாரிப்பவர் ஒரு பாரம்பரிய மருத்துவர் என்று கூறும் நபர் உண்மையில் ஆயர்வேதத்துறையில் பதிவு செய்யப்படவில்லை என்றும் சங்கம் தெரிவிததுள்ளது.

அந்த மருந்து தயாரிப்பதன் பின்னணியில் உள்ள செயல்முறை மற்றும் பொதுமக்களுக்கு அதன் பரிந்துரை குறித்து தொழிற்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

ஆயுர்வேத திணைக்களத்தில் உள்ள யோகா குறியீட்டு குழுவில் (yoga code committee) இம்மருந்து பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற பதிவுசெய்யப்படாத மருந்தை ஏற்கமுடியாது என்று ஆயர்வேத மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சாமல் ஆர்.குலத்திலகே சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், மருந்தை தயாரித்த தம்மிக்க பண்டார இது இராவண மன்னனின் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டதாக தொடர்ந்து கூறுகிறார். இம்மருந்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி அருந்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.