முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும் பாதயாத்திரை ஒரு வினோத நிகழ்வாகவே அமைந்துள்ளது. எனவே வினோத நிகழ்வுகளால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே    அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரையில் வினோத அம்சங்களே இடம்பெறுகின்றன.  இதில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிக ஆர்வம் செலுத்துகின்றார்.அவர் தனது தந்தைக்கு அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் செயற்படுகின்றார்.

இந்த வினோத அம்சம் அடங்கிய செயற்பாடுகள் நிறைந்த பாதயாத்திரையால் ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்று கருதினால் அது கனவாகவே இருக்கும். வரலாற்றில் இது போன்ற பாதயாத்திரைகள் இடம்பெற்றன. அவை ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது என்பதும் உண்மைதான்.

ஆனால் அந்த ஆர்ப்பாட்டங்கள் வலிமை நிறைந்தவையாக இருந்தன. அந்த வலிமை இந்த ஆரப்பாட்டத்தில் இல்லை.  மாறாக ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களின் வலிமையே இங்கு வெளிப்படுத்தப்படுகின்றது. 

எவ்வாறாயினும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிலேயே அடுத்த தேர்தல் நடைபெறும்.   அதனால் இப்போது முன்னெடுக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த பயனும் இல்லை.   

வடக்கில் முப்பது வருடங்கள் போராட்டம் நடத்தியும் ஆயுத குழுக்களால் எமது நாட்டை பிரிக்க முடியவில்லை. ஆனால் இவர்கள் வினோத ஆர்பாட்டத்தில் ஆட்சியை மாற்றிவிட முற்படுவது வேடிக்கையானது.

இந்த யாத்திரையில் திருடர்கள் கூட்டமே நிறைந்துள்ளது.  அதனால் இவர்களை மக்கள் ஏற்கப் போவதும் இல்லை என்றார்.