லங்கா பிரீமியர் லீக் இருபது -20 கிரிக்கெட் தொடரின் 15 போட்டிகள் முடிவில், மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

அதேநேரம் அரையிறுதிக்கு நுழையும் நான்காவது அணி எது என்பதை தீர்மானிக்க காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான போர் உருவாகியுள்ளது. 

7 ஆம் திகதி கொழும்பு கிங்ஸ் அணியை வென்றதன் மூலம் காலி கிளாடியேட்டர்ஸ் புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகள் எதிர்கொண்ட 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்து ஒன்றில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளன.

இந் நிலையில் ஆரம்ப சுற்றில் இவ் விரு அணிகளுக்கும் இரு போட்டிகள் மாத்திரம் எஞ்சியுள்ளது. அந்த இரு போட்டிகளிலும் அதிக வெற்றிகளை பதிவுசெய்யும் அணி நான்காவது அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழையும்.

அதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள தொடரின் 16 ஆவது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் - கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதும்.

யாழ்ப்பாணம் அணி முன்னதாக அரையிறுதிக்கு நுழைந்து விட்டுள்ள நிலையில், கண்டி அணிக்கு இப் போட்டியின் முடிவு தீர்க்கமானது. 

அதேபோல் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகும் தொடரின் 17 ஆவது போட்டியில் தம்புள்ளை வைக்கிங்ஸ் - காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிய இரண்டாவது அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ள நிலையில் காலி அணிக்கு இப் போட்டி தீர்க்கமானதாக அமைந்துள்ளது.

இந்த போட்டிகளில் காலியும் கண்டியும் வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வியைத் தழுவினாலோ, நாளை இடம்பெறும் காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி சிறப்பம்சமாக இருக்கும்.

ஆறு போட்டிகளில் விளையாடி, நான்கு போட்டிகளில் வென்ற யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலில் சரிசமமாக இருந்தாலும், மொத்த மதிப்பெண் வேகத்தில் உள்ள இடைவெளியினால் யாழ்ப்பாணம் முதலிடத்தில் உள்ளது.

யாழ்ப்பாணத்தின் வேகம் 1.243 ஆகவும், தம்புள்ளை வைக்கிங்ஸ் --0.036 என்ற வேகத்திலும் உள்ளது. 

அதேநேரம் எட்டு புள்ளிகளுடன் கொழும்பு கிங்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை நடைபெற்று முடிந்த போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற பெருமையை காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க பெற்றுள்ளார்.

ஆறு போட்டிகளில் விளையாடிய தனுஷ்கா, 64.4 என்ற இன்னிங்ஸ் சராசரியாக 322 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அதேபோல் பந்து வீச்சில் வீச்சில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் யாழ்ப்பாணம் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வர்னிந்து ஹரசங்க உள்ளார்.

அவர் ஆறு போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.