இலங்கையின் அபிவிருத்தி கொள்கையைச் செயற்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்குக் கடனுதவியாக வழங்கத் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பான   ஆவணங்கள் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிச் சுஹனுமா அவர்களால் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவிடம் நேற்று முன்தினம் நண்பகல் நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்திக்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் இக்கடனுதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

25 வருட காலப் பகுதியில்  இந்த கடன்  மீளத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். எனினும் இக்கடனைத் திருப்பிச் செலுத்தவென 07 வருட சலுகைக்  காலப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. வருடாந்தம் 1.4  வீத  வட்டி வீதத்தின் கீழ் இக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற  கடனை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்குவது இதுவே முதல் தடவையாகும். 

கடனுதவி தொடர்பான அறிவிப்பு ஆவணங்களை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களிடம் கையளித்ததைத் தொடர்ந்து ஜப்பான் தூதுவர் கெனிச் சுஹனுமா   குறிப்பிடுகையில் 

“இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒழுங்கு முறையாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையிலேயே    இக்கடனுதவி வழங்கப்படுகின்றது. இதன் மூலம் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் இராஜ தந்திர நட்புறவு மேலும் வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்று கூறினார்.

நிகழ்வில்   நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் குறிப்பிடுகையில்  

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜப்பான் நாட்டுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பிரதிபலனாக இந்நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது. இலங்கை தொடர்பில் சர்வதேசம் வைத்துள்ள நம்பிக்கை இதனூடாக மேலும் வலுவடைவது தெளிவாகின்றது என்றார்.  

நிதியமைச்சர்   மேலும் குறிப்பிடுகையில் 

கடன் பெறாது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. என்றாலும் நாம் பெறுகின்ற கடன்களை நாட்டு மக்களின் சுபீட்சத்திற்காகவன்றி தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்த முடியாது. எமக்கு தேவை வீழ்ச்சி அடைந்துள்ள எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதேயாகும். அபிவிருத்திக்கு நாம் நிதி பெற்றுக் கொடுப்போம் என்று நாம் அன்று கூறினோம். இன்று அந்த நிதி எமக்கு எவ்வாறு கிடைக்கப் பெறுகின்றது என்பதை எவரும் இலகுவாக அறிந்து கொள்ள முடிகின்றது. அதனால் இந்நிதி மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அபிவிருத்தியைக் கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளோம். அன்று அபிவிருத்தி எங்கே ? என்று குரல் எழுப்பியவர்கள் இன்று பீதியடைந்து பாத யாத்திரை செல்லுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.